முகப்பு
 
தொடக்கம்

காதற் காமம்

காதல் என்பது உள்ளப்பற்றையும் காமம் என்பது உடற்பற்றையும்
குறிப்பது. இவ்விரு சொல்லும் குறித்த பொருளை ஒருங்கே காட்டுதற்குச்
சொல் இன்மையின் காதற்காமம் என்னும் புதுத்தொடரைக் குன்றம்பூதனார்
படைத்திருப்பதைப் பரிபாடல் அடி கொண்டு விளக்குவர். ‘காதற் காமம்
காமத்துச் சிறந்தது, விருப்போரொத்த மெய்யுறுபுணர்ச்சி’ என்பது அப்
பரிபாடற் பகுதி (9:14,15). இக்கருத்தைக் ‘காதலங்காமம்’ (பரிபாடல் 6:71)
எனவும் வழங்குவர். சங்க இலக்கியத்தில் காதல் வருமிடத்துக் காமப்
பொருளும் காமம் வருமிடத்துக் காதற் பொருளும் பெறுதலையும் சுட்டிக்
காட்டுவர்.

காமச் சிறப்பு

அகத்திணையின் சிறப்பையும் அதனால் எய்தக் கூடிய நன்மைகளையும்
இந்நூல் அறிவிக்கின்றது. காமம் பிறப்பின் இயல்பினது; நல்லது; இனியது;
இன்றியமையாதது. காமத்துறையில் எண்ணங்களை எண்ணுவது எப்படி?
சொல்லுவது எப்படி? புறச் சூழ்நிலைகளைப் பயன்கொள்வது எப்படி?
புணர்வைத் துய்த்தும் பிரிவைப் பொறுத்தும் வாழ்வது எப்படி? என்ற
அறிவுகளை அகப்பாடல்கள் கற்பிக்கும் என்பர். ஆண்பாலின் பெரு
மிதத்தையும் உரிமையையும் மனைவி மதிப்பதும் பெண்பாலின்
அருமையையும் நிறையையும் நாணத்தையும் கணவன் மதிப்பதும்
இன்றியமையாதன என்பதை ஆசிரியர் வலியுறுத்துவர். ஊடலில்
ஆடவனது பணிவையும் வேண்டுதலையும் கண்டு அவனைக் காமுகன்
என்றோ, சிறியவன் என்றோ, கருதித் தருக்காது கற்பின் வணக்கம் என்று
அறிந்து இன்ப அருள் செய்பவள் மனைவி என்பர். (468)

தமிழ்க்காதல்

சங்க இலக்கியங்கள் 1862 அகப் பாடல்களை உடையன. ஒவ்வொரு
பாடலிலும் ஆண்பெண் உள்ளங்கள் உள்ளன. அப்பாடல்களைக் கற்பவர்
3724 காதல் உள்ளங்கள் பற்றிய அறிவு பெறுவர்; மேலும் தலைவன்
தலைவியர் பற்றிப் பாங்கன் நினைத்தனவும், ஊரார், கண்டார் நினைத்தனவும்
ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர் என்பது ஆசிரியரின்
துணிபு. இந்நூல் தொல்காப்பிய அடிப்படையில் சங்க அகத்திணைப்
பாக்களை ஆய்ந்து பல நன்முடிபுகளை ஆங்காங்கே நுவல்கின்றது.
அகத்திணைச் செய்திகளைப் புலப்படுத்தும் பாங்கும் சில சங்கப்
பாடல்களுக்கு விளக்கத்துடன் தரும் நயமும் உளவியலை இயைத்துக்
காட்டும் சீர்மையும் தனித்தமிழ் நடையின் இனிமையும் இந்நூல் கற்கும்
தமிழார்வலர்கட்கு நல்விருந்தாகும். அகத்திணையின் இயல்புகளைப்
பாரித்துரைக்கும் ‘தமிழ்க்காதல்’, தமிழின் சிறப்பையும் மாண்பையும்
இனிமையையும் புலப்படுத்தி நிற்றலின் தமிழிடத்தும் காதலை உண்டாக்கும்
என்பது ஒருதலை. தமிழ்கூறும் நல்லுலகம் ‘தமிழ்க் காதல்’ வழங்கும்
காதலின்பத்தையும் தமிழின்பத்தையும் துய்த்துத் திளைப்பதாகுக!


முன்பக்கம்
அடுத்த பக்கம்