முகவுரை
காதல் உடலுக்கு
நல்லது, உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது,
உலகத்துக்கே நல்லது. அந் நல்ல காதல் எது?
காதல் என்பது
உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசி, அப்பசி
தீர்க்கும் உணவு நெறி எது?
அஃறிணையுயிர்களின்
காதலாவது கல்லாக் காமம், இயற்கை வீறு.
மொழி பேசும் மக்களினத்தின் காதல் நினைவில் இனித்து, அறிவில்
விளங்கிக் கல்வியில் வளர்வது. அவ் வளர்ச்சிக் கல்வி எது?
காதலையும் அதன்
உணர்வையும் அதன் கல்வியையும் தெளிய
வேண்டின், தெளிவுக்கு வேறிடம் இல்லை. தமிழ்ப் பேரினம் கண்ட
அகத்திணையை நாடுக. தொல்காப்பியம் சங்கவிலக்கியம் திருக்குறள் என்ற
முத்தமிழக நூல்களைக் கற்க முந்துக. காதல் சான்ற தமிழியங்களையெல்லாம்
தெளிந்து நுகர்ந்து குடிதழைத்து வாழ்க.
நெறியாகவும்
அளவாகவும் உரமாகவும் நாணமாகவும் கற்பாகவும்
காமக்கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழிற்றான்
உண்டு. அதுவே அகத்திணை. இத் திணைக்கல்வி பருவம் வந்துற்ற
நம்பியர் நங்கையர்க் கெல்லாம் வேண்டும், வேண்டும். அன்னவர்
திருமணம் நறுமணம் பெறும். அக் காதலர்தம் வாழ்வில் உள்ளப்பூசல் இராது.
ஊடற்பூசலே இருக்கும்; வெங்கட்சினம் இராது, செங்கட் சினமே இருக்கும்.
அகத்திணை கற்ற
கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர்,
எடுத்த உடம்பை மதிப்பர், கொண்ட மணத்தை மதிப்பர், ஒருவர் ஒருவர்தம்
காம நாடிகளைப் புரிவர், காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர்,
வித்தில்லாக் காமப் பழத்தை உண்பர், மெய்யின்பத்தை உயிரின்பமாகப்
போற்றி ஒழுகுவர், அகத்திணை வாழ்க்கையை அன்புத்திணை
வாழ்க்கையாகப் காண்பர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின்
டாக்டர் பட்டத்துக்கு யான் எழுதிய
ஆங்கில நூலின் முடிபுகள் இத்தமிழ் நூற்கண் விரிவாகவும், விளக்கமாகவும்
அமைந்துள.
இந்நூலின் செம்மைக்கு
உதவிய திருக்குறள் உரைவேற்றுமை ஆசிரியர்
இரா.சாரங்கபாணி எம்.ஏ. அவர்கட்கு நன்றியன்.
இந்நூலைக் கற்கத்
தொடங்குவோர் இறுதியில் உள்ள அகத்திணைக்
கல்வி என்னும் பகுதியை முதற்கண் கற்க வேண்டுவன்.
வ.சுப.
மாணிக்கம்
|