தமிழர் வளர்த்த அழகு கலைகள்

அழகுக் கலைகளைப் பற்றி மேல்வாரியான செய்திகளே இந்நூலில்
பேசப்படுகின்றன.  அழகுக் கலைகளின் முற்ற முடிந்த செய்திகளைக் கூறுவது
இந்நூலின் நோக்கம் அல்ல. அழகுக் கலைகளைப் பற்றிய மேல்வரம்பான, பொதுத்
தன்மையைக்  கூறும் நூல் ஒன்று வேண்டியிருப்பதை உணர்ந்தே இந்நூல்
எழுதப்பட்டது.

அழகுக் கலைகளை நன்கறிந்த அறிஞரே அக்கலைகளைப் பற்றி எழுதத்
தகுதி வாய்ந்தவர். ஆனால், அக்கலைகளையெல்லாம் ஒருங்கே கற்றறிந்த அறிஞர்
கிடைப்பது அரிதினும் அரிது. இந்நூலை எழுதியவர் இக்கலைகளையெல்லாம்
முழுவதும் அறிந்தவர் அல்லர். ‘‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில, மெல்ல
நினைக்கில் பிணிபல.’’ அழகுக் கலைகள் ஒவ்வொன்றும் கடல் போன்று விரிந்து
ஆழமானவை. அவற்றையெல்லாம் துறைபோக ஆழ்ந்து கற்பதற்கு ஆயுள்
போதாது.

பண்டைக் காலத்தைப்போல மனித வாழ்க்கை அமைதியாக, நிதானமாக
இக்காலத்தில் செல்லவில்லை. இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதரின்
வாழ்க்கை மோட்டார்கார் சக்கரம்போல வெகு வேகமாகச் சுழன்று
கொண்டிருக்கிறது. வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிற மனித வாழக்கையிலே,
கவலையற்ற நிம்மதியான வாழ்க்கை வாய்க்கப் பெற்றவரும் கூட, அழகுக்
கலைகளை ஆழமாகவும் நுட்பமாகவும் அறிய முடிகிறதில்லை.

அழகுக் கலைகளைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாவிட்டாலும்,
அவற்றைப் பற்றிய மேல்வாரியான பொதுச் செய்திகளையாவது அறிந்திருக்க
வேண்டுவது நாகரிகம படைத்த மக்களின் கடமையாகும். அழகுக் கலைகளை
உண்டாக்கி, உயரிய நிலையில் வளர்த்துப் போற்றிப் பாதுகாத்து வந்த தமிழ்ச்
சமூகத்தின் பரம்பரையினர், இக்காலத்தில் அவை மறைந்து போகும் அளவுக்கு
அவற்றை மறந்து வாழ்வது நாகரிகச் செயலாகாது.  தமது மூதாதையர் வளர்த்துப்
போற்றிய கலைகளைச் சிறிதளவாவது அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது
அவர் வழிவந்த பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.