இக்காலத்தில் அழகு கலைகளைப் பற்றிய நூல்கள் சில
வெளிவந்துள்ளன.
ஆனால்,அவை தமிழரின் அழகுக்
கலைகள்
அனைத்தையும் கூறவில்லை. அழகுக்கலைகள்
அனைத்தையும் ஒருங்கே
அறிமுகப்படுத்தும் நூல் ஒன்று
தேவைப்படுவதை
அறிந்து,
இந்நூல்
எழுதப்பட்டது. இந்நூலில் குற்றங் குறைகள்
இருக்கலாம். குற்றம்
புரிவது
மனித
இயற்கை; குற்றம் நீக்கிக் குணத்தைக் கொள்வது
அறிவுடையோர் கடமை.
இந்நூலில்
சிற்சில இடங்களில் சில செய்திகள் மீண்டும் மீண்டும்்
கூறப்படுகின்றன. இதனைக் ‘கூறியது கூறல்’
என்னும் குற்றமாகக்
கொள்ளக்கூடாது.
தெளிவுபட விளக்குவதற்காக இவ்வாறு கூறவேண்டுவது
அவசியமாயிற்று.
இந்நூலுக்குப் புறம்பான ஒரு செய்தியைக் கூற வாசகர் விடை
தரவேண்டுகிறேன்.
சில செய்திகள் புதிதாக
ஆராய்ந்து இந்நூலுள்
கூறப்படுகின்றன. முக்கியமாகக் கோயில் கட்டட வகைகளைப் பற்றிய
செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறேன். இது மறக்கப்பட்டு மறைந்து போன
செய்தியாகும்.
இதனை ஆராய்ந்து முதன் முதலாக இங்குக் கூறியுள்ளேன்.
இச்செய்தியைப்
பிற ஆசிரியர் எடுத்து எழுதலாம். ஆனால்,
இந்நூலிலிருந்து
எடுக்கப்பட்டது
என்பதைத் தயவு செய்து குறிப்பிட
வேண்டும். இதை
ஏன் இங்குக் குறிப்பிடுகிறேன்
என்றால், எனது
‘பௌத்தமும் தமிழும்’ என்னும்
நூலிலிருந்து சில விஷயங்களை எடுத்து
எழுதிக் கொண்ட ஒருவர், அந்நூலைக்
குறிப்பிடாமல், தானே அவ்
விஷயங்களை
ஆராய்ந்து கண்டுபிடித்தது போல
எழுதிக் கொண்டார். இவர்
பொறுப்பு வாய்ந்த
அரசாங்க உயர்தர உத்தியோகஸ்தர்!
இவரைப்போல மற்றவர்களும் செய்யக்கூடாது என்பதற்காகவே இங்கு
இதனைக்குறிப்பிட வேண்டியதாயிற்று. நூலாசிரியர் எல்லோரும்
இப்படிக்களவாடுவதில்லை;
ஒரு சிலர் செய்கிறார்கள், என்ன செய்வது!
மயிலை.சீனி-வேங்கடசாமி |