தெய்வ வணக்கம்
|
பாரோர்கள் நற்புகழும்
பட்டண மருதூர் வாழும்
பதி னெட்டாம் படிக் கறுப்பா!
பதி னெட்டாம்படிக் கறுப்பா!
ஊருக்கு மேல் புரமாம்:
ஒத்த உடை மரமாம்
உடை மரத்தின் கீழிருக்கும்,
உத்தமனே வாருமையா!
சாலைப் பாதை மேல்புரமாம்
சமர்த்தா குடியிருக்கும்
கொத்தளத்து வாழ் கறுப்பா,
கூவியழைத்தேனையா
தூண்டிக் கறுப்பா;
துடியான வாள் வீரா
சுற்றி வர கம்மாக் கரை;
சூழ வர கம்மாக் கரை;
சூழ வர உடங்காடு
உடங்காட்டு மத்தியிலே
உத்தமனே தனியிருக்கும்
எண்ணைய்த் தலையழகும்;
எழுத்தாணி மூக்கழகும்
கையிலே வீச்சறுவா;
காலுலே வீரத் தண்டை
நெத்தியில் பொட்டுமிட்டு,
நீல வர்ணப் பட்டுடுத்தி
பட்டு பளபளென
பாடகக்கால் சேராட;
தோள் மேலே பச்சைக் கிளி
தோழனழைத் தேனிப்பம்
கரு நாயும் சங்கிலியும்;
கைப்பிடித்து வாருமிப்போ.
வெள்ளக் குதிரை ஏறி
வெடி வாலும் சீனிமட்டம்
நெத்தியிலே சுட்டு கட்டி;
நீல வர்ணப் பூச்சூடி
மத்தியான வேளையிலே
மாதர்களைத் தானடக்கும்
பக்தியுள்ள ஏ கறுப்பா
பதினெட்டாம் படியோனே.
ஏமமும், சாமமும்
எந் நேர வேளையிலும்
அந்தி சந்தி வேளை யெல்லாம்
ஐயா துணையிருந்து
கேட்ட வரம் நீ கொடுக்கும்
கிருவையுள்ள ஏ கறுப்பா!
வாலைக் கறுப்பா
வாருமையா இது வேளை.
முன்னோடி ஏ கறுப்பா
முன்னிலையில் வாருமிப்போ
ஏழை அழைத்தேனையா
இது சமயம் வாருமிப்போ
பாலன் அழைத் தேனையா
பாரும் குழந்தை முகம்
அஞ்சிலே ரெண்டறியேன்
அடியேன் சிறுகுழந்தை
பத்திலே ரெண்டறியேன்
பாலன் சிறு குழந்தை |
|
|