தாலாட்டு

இத் தாலாட்டில் குழந்தையைப் பார்க்கவரும் மாமனைப் புகழ்ந்தும், சிற்றப்பனை இகழ்ந்தும் பேசுகிறாள் தாய். தனது சகோதரன் போன் பேசும் மந்திரியாகவும், தந்தி பேசும் மந்திரியாகவும் அவளுக்குத் தோன்றுகிறான். வராத சிற்றப்பன் இன்று வந்து விட்டதால் காகம் கரைகிறதாம்; செம்போத்து கத்துகிறதாம். விருந்தினர்கள் வந்தால் காகம் கரையுமென்பது, சகுன நம்பிக்கை. காகம் கரைந்ததும் யார் வருகிறார்கள்? “உங்கப்பா கூடப்பிறந்த கருங்குறவர் வாராகோ,” செம்போத்துக் கத்தியதும் யார் வருகிறார்கள்? “உங்கப்பா கூடப்பிறந்த செம்படவர் வாராகோ,” தன் குழந்தையைப் பெருமையாகப் பேசும் தாய், தங்கள் குலத்துதித்து, ஆழ்வார் என்று வைணவர்களால் போற்றப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.

  ஆரிரரோ, ஆராரோ, கண்ணே
ஆரிரரோ, ஆராரோ
கண்ணே நவமணியே
கற்பகமே முக்கனியே
பால் போல் நிலவடிக்க கண்ணே
பரமசிவர் பந்தாட
பரம சிவரடித்த பந்தை
பார்த்தடிக்க வந்த கண்ணோ!
ஈக்கி போல் நிலவடிக்க-கண்ணே
இந்திரனார் பந்தாட,
இந்திரனார் அடித்த பந்தை
எதிர்தடிக்க வந்த கண்ணோ!
பாலால் படி யெழுதி கண்ணே-நாங்கள்
பல நாள் தவமிருந்தோம்.
நெய்யால் படி யெழுதி கண்ணே-நாங்கள்
நெடு நாள் தவமிருந்தோம்,
நெடு நாள் தவமிருந்து பெற்ற-நித்திலமே
நித்திரை போ
நித்திரை செய்; நித்திரை செய்,
நெடிய புவி மன்னவனே
சித்திரைப் பூந் தொட்டிலிலே
சிகா மணியே நித்திரை போ
யாரடித்தார் நீ யழுக
அடித்தாரைச் சொல்லியழு
சீரடிக்கும் கையாலே என்
சிகா மணியே நித்திரைபோ,
அம்மா அடித்தாளோ, கண்ணே
அமுதூட்டும் கையாலே
அக்கா அடித்தாளோ கண்ணே
அள்ளி எடுக்கும் கையாலே
பாட்டி அடித்தாளோ கண்ணே
பால் வார்க்கும் கையாலே
மாமா அடித்தானோ கண்ணே
மல்லிகைப்பூச் செண்டாலே
மாமி அடித்தாளோ கண்ணே உனக்கு
மைதீட்டும் கையாலே
தங்க மிதியடியாம் கண்ணே அது
தாலுகா கச்சேரியாம்
தாலுகா கச்சேரியில் உன் மாமன்
தந்தி பேசும் மந்திரியோ!
செட்டிமார் தெருவிலே என் கண்ணே
செண்டு விளையாடப் போகையிலே
செட்டிமார் பெண்டுக உன்
செண்ட விலைமதிப்பார்
பாப்பார் தெருவிலே
பந்து விளையாடயிலே என் கண்ணே
பாப்பார் பெண்டுக உன்
பந்தை விலைமதிப்பார்.
 

சேகரித்தவர்:
குமாரி P. சொர்ணம்

இடம்:
சிவகிரி,