காதல்

ஏன் வேலை செய்ய முடியவில்லை

நிலம் தரிசாகக் கிடக்கிறது.  அவனுடைய காதலி வயலுக்கு வருகிறாள்.  அவளிடம் அவன் ஏன் வேலை ஓட வில்லை? என்று சொல்லுகிறான்.  அவளும் தனக்கு வேலை ஓட வில்லையென்றும், அதற்குக் காரணம் என்னவென்றும் சொல்கிறாள். 

ஆண் பாடுவது 

  வண்டாளம் மரத்துக் காடு
வண்ணமுத்து உழுகும் காடு
தங்கம் விளையும் காடு
தரிசாய்க் கிடக்கிறது.
மஞ்சள் பூசியல்லோ
மதுரைப் பாதை போற புள்ளே
ஒம் மஞ்சள் வாடை தட்டி
வரப்பு வெட்டக் கூடலியோ?
பச்சிலை கழுத்தில் வச்சி
பாதை வழி போற புள்ளே-ஒம்
பச்சிலை வாடை தட்டி
வரப்பு வெட்டக் கூடலியோ?
அரிசி குத்தி மடியில் வைத்து
ஆவாரம் பூப் பொட்டும் வச்ச
சொருகு கொண்டை வெள்ளையம்மா-நீ
சோறு கொண்டு வாரதெப்போ? 
 

பெண்கள் பாடுவது 

  கார வீட்டுத் திண்ணையில
கரிக்கு மஞ்சள் அரைக்கியல
எந்தப்பய தூத்துனானோ-எனக்கு
இழுத்தரைக்கக் கூடலியே
கேப்பைப் கருது போல
கிளி போல பெண்ணிருக்க
எனக்குண்ணு இருக்கானே
எண்ணங் கெட்ட பாவி மகன்
புல்லு அறுக்கையிலே
புளியம் பூவும் கொண்டு போனேன்
புளியம் பூ வாட தட்டி-நான்
புல்லறப்ப மறந்து விட்டேன்
வாய்க்கா வரப்பு சாமி !
வயக்காட்டு பொன்னு சாமி !
களை எடுக்கும் பொம்பளைக்கு
காவலுக்க வந்தவனே !
 

சேகரித்தவர்:
S.S போத்தையா

இடம்:
விளாத்திக்குளம் வட்டம்
நெல்லை மாவட்டம்.