அத்தை மகன்முறை

அவளுக்கு அவன் அத்தை மகன் முறை. இருவரும் காதலித்துக் கூடுகிறார்கள். அத்தைமகன் அவளோடு கொஞ்சிப் பேசுகிறான். கிண்டலும் கேலியும் கலந்து அவளை வாயடைத்து வெட்கித் தலைகுனிய வைத்துவிட முயலுகிறான். பேச்சில் அவனுக்கு அவள் அடங்கவில்லை. அத்தைமகன் முறையாலே சற்று வாயை அடக்கிகொள்ளுவதாகச் சொல்லிக்கொண்டே அவன் வாயை அடக்கப் பார்க்கிறாள். போட்டியில் வெற்றி இருவருக்கும்தான் !

ஆண் : ரோட்டோரம் தோட்டக்காரி
மல்லியப்பூ சேலைக்காரி
நீ இறைக்கும் தண்ணியிலே
மல்லியப்பூ மணக்குதடி!

பெண்: அஞ்சு கிணத்துத் தண்ணி
அரைக் கிணத்து உப்புத்தண்ணி
செம்புக் குடத்துத் தண்ணி
சேருறது எந்தக் காலம்?

ஆண் : பொலி போடும் காட்டுக்குள்ள
பொதுக் கடை போடயில
நீ வாடி செவத்தப் புள்ள
உனக்குழக்கு நெல் தாரேன்

பெண் : நிலக்கடலை நாழி வேணும்
நேரான பாதை வேணும்
ஜோடி மட்டம் ரெண்டு வேணும்
சொகுசா வழி நடக்க

ஆண் : மஞ்சக் கிழங்கு தாரேன்
மார்புக் கேத்த ரவிக்கை தாரேன்
கொஞ்சி விளையாடி உனக்கு
குழந்தை கையிப் புள்ள தாரேன்

பெண் : காடைக் கண்ணி மாவிடிச்சு
கருப்பட்டியும் சேர்த்திடிச்சு
தின்னு ருசி கண்டவரே
தின்னக் கூலி கட்டிடுவேன்

ஆண் : ஆத்துல கடலைச் செடி
அதுல ரெண்டு செவலக் காளை
செவலக் காளை விலை பெறுமோ
குமரிப் புள்ள கைவிளைவி?

பெண் : குத்துக்கல்லு மேலிருந்து
குறும்பு பேசும் மச்சானே
அத்தை மகன் முறையாலே
அடக்கிக் கொண்டேன் மையலிலே

ஆண் : சுண்டப் பழமே-நீயே !
சுங்கொடிச் சேலைக்காரி
கண்டு என்னப் பாராமல்
சூதமாகிப் போனாயடி

பெண் : மச்சானே மன்னவரே
மனசிலயும் எண்ணாதிங்க
சூதமாகிப் போறாமிண்ணு
சூசகமாச் சொல்லாதிங்க

ஆண் : ஆத்தோரம் நாணலடி
அதன் நடுவே செய்வரப்பு
செய்வரப்புப் பாதையிலே
தேனமிர்தம் உண்கலாமோ?

பெண் : முத்துப்பல்லு ஆணழகா !
மெத்த மையல் கொண்டவரே !
ஆத்தில் தலைமுழுகி-உங்க
ஆத்திரத்தை நான் தீர்ப்பேன்.

வட்டார வழக்கு: சூதமாகி-கள்ளத்தனமாய்.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம்.