நான் வருவேன் நடுச்சாமம்

காதலியின் கிராமத்திற்கும், காதலின் கிராமத்திற்கும் இடையில் பொருனையாறு ஓடுகிறது. மழைக்காலம் ஆற்றில் கழுத்தளவு தண்ணீர் வருகிறது. கரையிறக்கத்தில் கிடந்ததோணி தண்ணீரோடு போய் விட்டது. அன்றிரவு அவன் அவளிடம் வருவதாகச் சொல்லியிருந்தான். அச் சொல்லைக் காப்பாற்ற வெள்ளத்தை நீந்தியே சென்று விடுவதென முடிவு செய்கிறான். அக்கரையிலிருந்தே அவன் பாடுகிறான். இக்கரையிலிருந்த காதலிக்கு அது கேட்டதோ இல்லையோ?

  ஆத்துல தோணிவிட
ஆளிறங்காத் தண்ணி வர
நான் வாரேன் நீச்சலில
நினைவாப் படுத்திரடி
சடசடணு மழை பேய
சாமம் போல இடி விழுக
கொடை பிடிச்சு நான் வாரேன்
குணமயிலே தூங்கிராத
இடி விழுந்து மழை பெய்ய
கொடை பிடிச்சு நான் வாரேன்
குணமயிலே தூங்கிராத
நாராங்கி வீட்டுக்கார
நடுத் தெருவு வெள்ளையம்மா
நான் வருவேன் நடுச் சாமம்
நாயை விட்டு ஏவிராத

வட்டார வழக்கு: ஆளிறங்கா -ஆளிறங்க முடியாத; இடி விழும் -இடிவிழ; தூங்கிராத -தூங்கி விடாதே; ஏவிராத -ஏவிவிடாதே.

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
நெல்லை மாவட்டம்.