சத்தியம்

தினந்தோறும் அவளைக் காண வரும் காதலன் சில நாட்கள் வரவி்ல்லை. ஒரு நாள் அவள் வயலில் வேலை செய்யும் பொழுது அவன் வந்து நிற்கிறான். அவளுக்கு கோபம். எனவே சிறிது நேரம் பேசவில்லை. அவன் கெஞ்சுகிறான். வராமலிருந்ததற்குக் காரணங்கள் கூறுகிறான். அக்காரணங்கள் நியாயமென்று தோன்றிய போதிலும், அவன் தன்னை மறப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுக்கும்படி அவள் கேட்கிறாள். சத்தியம் செய்வதில் பலவகைகள் உண்டு. உறவினர் தலையடித்துச் சத்தியம் செய்தல், சூடமணைத்துச் சத்தியம் செய்தல், கையிலடித்துச் சத்தியம் செய்தல், கோயில் கொடி மரத்தை தொட்டுச் சத்தியம் செய்தல், வெற்றிலை, அன்னம் முதலியவற்றைத் தொட்டுச் சத்தியம் செய்தல், துணிபோட்டுத் தாண்டிச் சத்தியம் செய்தல் முதலியன. சத்தியம் செய்து மீறினால் தெய்வ தண்டனை கிடைக்கும் என்பது பாமர மக்களது நம்பிக்கை.

  எலுமிச்சம் போல
இரு பேரும் ஒரு வயது
சரியாக இருப்ப மிண்ணு
சத்தியமும் கூறினமே
அரக்கு லேஞ்சுக் காரா நீ
பறக்க விட்ட சண்டாளா !
மறக்கலைண்ணு சொல்லி
வலக்கை போட்டுத் தாடா
மீனாட்சி கோயிலுல
முன்னம் ஒரு கம்பம் உண்டு
கம்பத்தைத் தொட்டுத் தந்தா
களங்கம் இல்லை உன் மேலே.


சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
விளாத்திக்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.