1,
தமிழ் மொழி
பழந்திராவிடம்
இந்திய நாடு
முழுதும் மிகப் பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட
மொழி (Proto Dravidian) என்று கூறுவர். வடகிழக்குக் கணவாய் வழியாகத் துரானியரும்
வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியரும் வந்து வட இந்தியாவில் இருந்த மக்களோடு கலந்து
ஒன்றானார்கள். அப்போதும் வடஇந்தியாவில் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழி
பலவகை மாறுதல் பெற்றது. பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் தோன்றின. அந்நிலையிலும்
சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த
மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்த காரணத்தால்,
நெடுங்காலம் அவை திராவிட மொழிகளாகவே அங்கங்கே நின்றுவிட்டன. கோலமி (Kolami),
பார்ஜி (Parji), நாய்கி (Naiki), கோந்தி (Gondi), கூ (Ku), குவி (Kuvi), கோண்டா
(Konda), மால்டா (Malda), ஒரொவன் (Oroan), கட்பா (Gadba), குருக் (Khurukh),
பிராகூய் (Brahui) முதலான மொழிகள் இன்றும் திராவிட மொழியினத்தைச் சார்ந்தவைகளாக
இருப்பதற்குக் காரணம் அதுவே. வரவர இந்த மொழிகளைப் பேசும் மக்கள் அடுத்துள்ள மொழிகளைக்
கற்று மற்ற மக்களோடு ஒன்றுபட்டு வருவதால், அவர்களின் தொகை குறைந்து வருகிறது. வங்காளத்தில்
ராஜ்மஹால் மலைப்புறங்களில் வாழ்வோரும், சோடாநாகபுரியில் சுற்றுப்புறத்தில் வாழ்வோரும்
பிறரும் இதற்குச் சான்றாக இருக்கிறார்கள். இந்தியாவின் வடமேற்கே பலுச்சிஸ்தானத்தில்
ஒரு சாரார் பேசும் மொழி பிராகூய் (Brahui). அந்த மொழியில் திராவிட மொழியின்
கூறுகள் மிகுதியாக உள்ளன. ஆரியர்கள் அந்த வழியாக வந்து இந்தியாவில் குடிபுகுந்த பிறகும்,
அவர்கள் பேசும் மொழி தனித்து இருந்துவந்தது. இரட் (இரண்டு), முசிட் (மூன்று) முதலான
எண்ணுப்பெயர்களும், மூவிடப் பெயர்களும் (personal pronouns), வாக்கிய அமைப்பும்
(syntax) மற்றும் சில இயல்புகளும் பிராகூய் மொழியில் இன்னும் தமிழைப் போலவே
இருப்பதைக் கண்டு அறிஞர்கள் வியப்படைகிறார்கள். 1911 - ஆம் ஆண்டின் மக்கள் தொகைக்
கணக்கில் (census), அந்த மொழி திராவிட மொழிகளோடு வைத்துக் கணக்கிடப்பட்டது.
அப்போது அதைப் பேசிய மக்களின் தொகை 1,70,000. வர வர அவர்களின் தொகை குறைந்துவருகிறது.
இப்போது சில
|