பக்கம் எண்: - 4 -

இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷீயா, தென் ஆப்ரிக்கா, பிஜித் தீவு, மொரீஷியஸ் முதலான பல நாடுகளிலும் பல லட்சக்கணக்கான மக்கள் பேசும் மொழியாக உள்ளது.

தமிழ் மக்கள் மிகப் பழங்காலத்திலேயே கடல் வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் சிறப்படைந்திருந்தார்கள் என்பதற்குத் தமிழிலக்கியச் சான்றுகள்மட்டும் அல்லாமல் வெளிநாட்டாரின் பழங்காலக் குறிப்புகளின் சான்றுகளும் உள்ளன. கி.மு. பத்தாம் நூற்றாண்டின் அரசனாகிய சாலமனுக்குத் தமிழ் நாட்டுக் கப்பல்கள் மயில் தோகையும் யானைத் தந்தமும் வாசனைப் பொருள்களும் கொண்டு சென்றன. பழைய ஈப்ரு மொழியில் உள்ள துகி (மயில் இறகு) என்னும் சொல் தோகை என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு; அஹலத் (வாசனைப் பொருள்) அகில் என்னும் தமிழ்ச்சொல் திரிந்து அமைந்தது. இன்று ஆங்கிலத்தில் உள்ள சாண்டல் (sandal wood), ரைஸ் (rice) என்னும் சொற்கள் கிரேக்க மொழியின் வாயிலாகப் பெறப்பட்ட பழைய தமிழ்ச் சொற்களாகிய சந்தனம் (சாந்து), அரிசி என்பவற்றின் திரிபுகளே. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயிலும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவுக்குக் கடல்வழியாகச் சென்றன. அக்காலத்தில் கிரேக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இஞ்சியும் பிப்பிலியுமே சிக்கிபெரஸ், பெப்பரி (ஆங்கிலத்தில் ginger, pepper) என்ற கிரேக்கச் சொற்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆயின. ரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் அந்நாட்டுடன் தமிழ்நாட்டுக்குக் கடல் வாணிக உறவு இருந்தது. அக்காலத்து ரோம நாணயங்கள் தமிழ்நாட்டின் புதை பொருளாராய்ச்சியில் கிடைத்துள்ளன. கி.மு. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழர் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குச் சென்று வாணிகம் செய்து வந்தனர். அங்குக் கிடைத்துள்ள இரும்புக்காலப் பொருள்கள் அதைக் காட்டுகின்றன. பர்மா, மலேயா, சீனம் முதலிய நாடுகளோடு தமிழ்நாட்டார் வாணிகம் செய்துவந்தார்கள். சீனாவிலிருந்து சர்க்கரையும் பட்டும் கொண்டு வந்தார்கள். அதனால் சர்க்கரை சீனி என்று தமிழில் சொல்லப்படுகிறது. சீனப் பட்டு என்பது இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது.

ரோமர்கள் தமிழ்நாட்டு முத்துக்களையும் யானைத் தந்தங்களையும் மெல்லிய(மஸ்லின்) ஆடைகளையும் பெற்று மகிழ்ந்த காரணத்தால், ரோமர்களின் செல்வம் நாட்டை விட்டு வெளியேறி விடுகிறதே என்று ஆட்சியாளர்கள் வருந்திய காலம் ஒன்று இருந்தது (கி. பி. 16 - 37). ஐரோப்பாவிலிருந்து யாத்திரை செய்த பிளைநி (கி. பி. 24 - 79) என்பவரின் குறிப்புகள் சான்றாக உள்ளன. பெரிப்ளுஸ் என்ற நூலின் ஆசிரியரும் (கி. பி. 60) இத்தகைய குறிப்புகள் பல எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பழங்காலத்