துறைமுகங்களாகிய
தொண்டி, முசிறி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் என்ற இடங்களைப்பற்றிய குறிப்புகளையும்
அவர் நூலில் காணலாம். தாலமி என்பவர் (கி. பி. 150) மேலும் பல குறிப்புகளை எழுதி
வைத்துள்ளார். சேரர், சோழர், பாண்டியர் என்ற அரசர்களைப் பற்றிய குறிப்பும்,
கருவூர், நாகப்பட்டினம், புதுச்சேரி முதலிய ஊர்களைப்பற்றிய குறிப்பும் அவர் நூலில்
உள்ளன. அந்த ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் பழைய தமிழிலக்கியத்தில் உள்ள
வரலாற்றுக் குறிப்புகளோடு ஒத்தவைகளாக இருக்கின்றன.
தமிழர்களின்
பழைய பின்னக் கணக்கு மிக்க நுட்பம் உடையது என்பது, அவர்களின் மிகப் பழைய வாணிக
அனுபவத்தைக் காட்டுவதாக உள்ளது. 1/320 X 1/7 என்னும் பின்னத்தை இம்மி என்றும்,
அதில் ஏழில் ஒரு பங்கை அணு என்றும், அதில் பதினொன்றில் ஒரு பங்கை மும்மி என்றும்,
அதில் ஒன்பதில் ஒரு பங்கைக் குனம் என்றும் குறித்துக் கணக்கிட்டு வந்தனர்.
வடமொழியில்
உள்ள இதிகாசங்களாகிய ராமாயணத்திலும் பாரதத்திலும், தமிழ்நாட்டைப் பற்றியும்,
மதுரை என்னும் தலை நகரத்தைப்பற்றியும் குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்த மௌரியன்
காலத்தில் கிரேக்க தூதராக வந்த மெகஸ்தனீஸ், பாண்டிய நாட்டைப்பற்றியும் நாட்டு
அரசியல்பற்றியும் எழுதியுள்ளார். அசோகன் கல்வெட்டுகளில் தமிழ் அரசர்களைப்பற்றிய
குறிப்புகள் உள்ளன.
இலக்கணப் பழமை
தொல்காப்பியம்
என்னும் பழைய தமிழ் இலக்கண நூல் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. முன்னோர்
சொல்வனவாகவும், பழைய நூல்களில் கூறப்படுவனவாகவும் அவர் அடிக்கடி குறிப்பிடும் குறிப்புகள்
இருநூற்றைம்பதுக்குமேல் உள்ளன. அவற்றால், அதற்கு முன்பே இலக்கண நூல்களும் இலக்கியங்களும்
தமிழில் இருந்தன என்பது அறியப்படுகிறது. அந்த நூலில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல்,
வடசொல் என நான்கு வகைச் சொற்களைக் குறிப்பிடுகிறார். இயற்சொல் என்பன அன்றாட
வழக்கத்தில் உள்ள சொற்கள். திரிசொல் என்பன செய்யுளில்மட்டும் வடிவு வேறுபட்டு
வழங்கும் சொற்கள். திசைச்சொல் என்பன நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையாக
வழங்கும் வட்டார வழக்குச் சொற்கள். வடசொல் என்பன சமஸ்கிருதத்திலிருந்து வந்து
தமிழில் வழங்கும் சொற்கள். அவ்வாறு வட சொற்களைக் கடன் வாங்கும்போது, வடமொழியாகிய
சமஸ்கிருதத்துக்கு உரிய ஒலிகளை விட்டுத் தமிழ் ஒலிகளோடு ஒத்தவாறு அமைத்துத் தமிழ்
எழுத்துகளால் எழுதவேண்டும் என்று விதியும் வகுத்துள்ளார். அந்தக் குறிப்புகள் எல்லாம்
தமிழ் மொழியின் வரலாற்றில் பழங்காலத்திலேயே நேர்ந்துள்ள மாறுதல்களைத் தெரிவிக்கின்றன.
|