தவிர, செந்தமிழ்
கொடுந்தமிழ் என்ற ஒருவகைப் பாகுபாடும் பிறகு காணப்படுகிறது. செந்தமிழ் என்பது புலவர்களால்
இலக்கியத்திற்கு உரியதாகப் போற்றப்பட்ட தமிழ். கொடுந்தமிழ் என்பது மக்களின்
பேச்சுவழக்கில் காணப்பட்ட தமிழ். அதனால் பழங்காலத்திலேயே இலக்கியத் தமிழுக்கும்
பேச்சு வழக்குக்கும் இடையே வேறுபாடு வளர்ந்துவிட்டது என்பது தெரிகிறது.
தமிழ்
எழுத்துகள்
பழைய
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் கிரந்த எழுத்திலும்
உள்ளன. கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட கல்வெட்டுகளில் இன்றைய தமிழ்
எழுத்துக்கள் உள்ளன. மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கி. மு.
மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. அதிலேயே தமிழுக்கு உரிய எழுத்துக்களின் வடிவத்தைப்பற்றிய
குறிப்புகள் உள்ளன. அதனால் தமிழ்மொழி நெடுங்காலமாகத் தனி எழுத்து வடிவம் பெற்றுவந்தது
என்பது தெளிவு. வட்டெழுத்து என்பது பழைய தமிழ் எழுத்தே. பிறகு அதிலிருந்து சில திரிபுகள்
ஏற்பட்டுத் தென் பிராமி எழுத்து அமைந்தது. பிராமி எழுத்திலிருந்தே வட்டெழுத்தும்
இன்றைய தமிழ் எழுத்தும் பிறந்தன என்று சிலர் தவறாகக் கருதுவர். தென்னிந்தியாவில்
வழங்கிய பிராமி எழுத்து வட இந்திய பிராமி எழுத்திலிருந்து வேறுபட்டு, தென்பிராமி
என்று குறிக்கப்படுகிறது. காரணம், வட்டெழுத்தை ஒட்டி அது வளர்ந்த வளர்ச்சியே ஆகும்.
பிராமி எழுத்துக்கள் தோன்றிப் பரவுவதற்கு முன்னமே, தமிழர்கள் தமக்கென்று எழுத்துமுறை
வைத்துக்கொண்டு, வாணிகம், இலக்கியம் முதலியவற்றிற்கு அதைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
இன்று
வழக்கில் உள்ள தமிழ் எழுத்து வடிவமும் வட்டெழுத்திலிருந்து வளர்ந்து அமைந்ததே ஆகும்.
அ இ உ எ ஒ என்னும் ஐந்து குறில் உயிர்களும் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் அவற்றின் நெடில்களும்
ஐ ஒள ஆகிய இரண்டு சந்தியக்கரங்களும் ஆகப் பன்னிரண்டு உயிரெழுத்துகள் தமிழில் உண்டு.
க ச ட த ப ற என்னும் வல்லெழுத்து ஆறும், அவற்றின் மூக்கினமாகிய (nasals) ங ஞ ண
ந ம ன என்னும் ஆறு மெய்களும், ய ர ல வ ழ ள என்னும் ஆறு இடையின மெய்களும் ஆகப் பதினெட்டு
மெய்யெழுத்துகள் உண்டு. உயிர்களில் எ ஒ என்னும் குறில் இரண்டும் தேவ நாகரியில்
இல்லாதவை. ஆனால் தமிழுக்கும் மற்றத் திராவிட மொழிகளுக்கும் அவை மிகத் தேவையானவை.
எடு - ஏடு, கொடு - கோடு,
|