பக்கம் எண்: - 17 -

கிறிஸ்தவ சமயத்தினர் வழங்கும் வடிவங்களைப் பெற்றன. இப்போது பைபிலும் நல்ல தமிழில் - தூய தமிழ் - வடிவில் - மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த புலவர்கள் எழுதிய நூல்களில் அரபுச் சொற்கள் கலந்தன. இன்றும் இஸ்லாமியக் குடும்பங்களைப்பற்றிய கதைகள் எழுதுவோர், அவர்கள் வழங்கும் அரபுச் சொற்களை அவற்றில் கையாள்கிறார்கள். ஆங்கிலம் படித்த, அல்லது பெரிய நகரங்களில் வாழும் குடும்பங்களைப் பற்றிய கதைகளில் சில எழுத்தாளர்கள், அவர்களின் பேச்சில் உள்ளபடியே ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதுகிறார்கள். இவ்வாறு பலவகையான காரணங்களால் காலந்தோறும், மற்ற மொழிச் சொற்கள் கலக்கும் முயற்சி வெவ்வேறு அளவில் வெவ்வேறு வேகத்தில் இருந்துவந்தபோதிலும், தமிழ் மொழியின் அடிப்படையான தனித்தன்மை மாறாமல் இருந்துவருகிறது. இந்தியாவில் இன்று உள்ள மொழிகளில், பிற மொழிச் சொற்களின் கலப்புக் குறைந்த மொழி தமிழ் என்று சொல்லத்தக்க நிலைமை உள்ளது.