பக்கம் எண்: - 16 -

வழங்குகின்றன. ஆனால் அவற்றில் இவ்வாறு வடிவங்களை முழுதுமாகத் திரிக்காமல், கூடிய வரையில் அந்தந்த மொழிகளின் வடிவங்களிலேயே வழங்குகிறார்கள். பஸ், சைக்கிள், கார், ஆபீஸ், லேட், போஸ்ட், பாங்க், காப்பி முதலான சொற்களை இன்றைய நாடகங்களின் உரையாடலிலும், நாவல்களிலும், சிறு கதைகளிலும் எழுத்தாளர்கள் அப்படியே கையாள்கிறார்கள். இவற்றை மிகுதியாகக் கையாள்வோரும் உண்டு; தேவையான இடங்களில் மட்டும், வேறு வழி இல்லாதபோதுமட்டும் குறைந்த அளவில் கையாள்வோரும் உண்டு. லீவ், ஸ்டாம்பு, ரயில், ஸ்டேஷன், டெலிபோன் முதலான ஆங்கிலச் சொற்கள் பேச்சுவழக்கில் இருந்த போதிலும், எழுதும்போது விடுமுறை, தபால்தலை, புகைவண்டி நிலையம், தொலைபேசி முதலான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவோரும் உண்டு. மூன்று நூற்றாண்டுகளுக்குமுன் அருணகிரியார் பாடலிலும் குமரகுருபரர் பாட்டிலும் சலாம், சபாசு (சபாஷ்) என்னும் உருதுச் சொற்கள் கலந்தது உண்டு. இன்றும் வடநாட்டாரின் தொடர்பால், சில இந்திச் சொற்கள் பேச்சுவழக்கில் கலந்துவருகின்றன. உணவுவிடுதிகளில் உணவு வகைகளின் பெயர்கள் பல இந்திச் சொற்களாக இருப்பதற்குக் காரணம் அதுவே.

தமிழில் நெடுங்காலமாக வட மொழிச் சொற்கள் சிற்சில கலந்துவந்தன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குமுன், சங்க இலக்கியக் காலத்தில் அவை நூற்றுக்கு ஒன்று என்ற விழுக்காட்டில் இருந்தன. கி. பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்களில் அவை நூற்றுக்கு மூன்றுமுதல் ஐந்துவரை கலந்தன. பிறகு காவியங்களிலும் அவ்வாறு கலப்பு நேர்ந்தது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மணிப்பிரவாள நடை ஏற்பட்டுச் சைனர்களும் வைணவர்களும் உரைநடையில் எழுதிய காலத்தில் அவர்களின் சமயச்சார்பான எழுத்துகளில் வட சொற்களின் விழுக்காடு மிகுதியாயிற்று. இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியவர்கள் அந்த மணிப்பிரவாள நடையைக் கைவிட்டுக் கூடியவரையில் தூய தமிழிலேயே எழுதினார்கள். அவர்களின் எழுத்தில் வட சொற்கள் கலப்புக் குறைந்தது. புராணங்களும் தல புராணங்களும் உலா, கலம்பகம் முதலியவைகளும் எழுதிய காலத்திலும் நூற்றுக்கு ஐந்துமுதல் ஏழு எட்டுவரையில் அந்தக் கலப்பின் விழுக்காடு இருந்தது. யமகம், சிலேடை, மடக்கு முதலான சொல்லலங்காரங்களைக் கையாண்ட செய்யுள்களில் வடசொற்களின் விழுக்காடு மிகுந்தது. பிறகு, சொல்லலங்காரங்களும் செல்வாக்கு இழந்தன. சென்ற நூற்றாண்டில் இராமலிங்க சுவாமிகள் பாடல்களில் சிலவற்றில் தவிர, பெரும்பாலானவற்றில் வட சொற்கள் குறைவு. அவர் எழுதிய உரைநடையில் அவை மிகுதி. பைபில் முதலானவற்றின் மொழிபெயர்ப்பில், சொற்கள்