ஆழ்வார்களின்
பாடல்களுக்கு விளக்கவுரை எழுதிய வைணவப் பெரியோர்களும் சைன நூல்கள் சில இயற்றிய
சைனப் புலவர்களும் அந்தக் கலப்பு மொழியில் எழுதினார்கள். அதன் வாயிலாக, வடமொழிக்கும்
தமிழுக்கும் நெருங்கிய உறவு ஏற்படும் என்றும், வடமொழிப் புலவர்களும் தமிழ்ப் புலவர்களும்
ஒன்றுபட முடியும் என்றும் நம்பினார்கள். கிரந்த எழுத்தில் வடமொழி நூல்களையும் எழுதினார்கள்;
மணிப்பிரவாள நூல்களையும் எழுதினார்கள். மணிப்பிரவாளம் வளர்த்தவர்களின் நோக்கம்
நல்ல நோக்கமே. தமிழ் நாட்டில் வீணான பிளவு வளர்வதை விரும்பாமல், அறிவுலகத்தில்
நல்ல ஒற்றுமை ஏற்படுவதற்கு அது உதவியாகும் என்று நம்பினார்கள். ஆனால், ஒரு நாட்டு
மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வழிவழியாக ஊறி, வளர்ந்துவிட்ட மொழியின்
தன்மையைப் படித்தவர் சிலர் சேர்ந்து முயற்சி செய்து மாற்றிவிட முடியாது என்பதை,
அவர்கள் உணரவில்லை. நல்ல நோக்கம் கொண்டதே ஆயினும், மொழியின் இயல்புக்கு மாறானது
ஆகையால், அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. கம்பர் முதலான பெரும் புலவர்களும்,
பழைய இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுதிய புலவர்களும் அந்த முயற்சியைப் போற்றவில்லை.
தமிழ் மொழியின் இயல்பை உணர்ந்து, அதற்கு ஏற்ற வகையில் தம் நூல்களைப் படைத்தார்கள்.
கம்பர் தம் இராமாயணத்தில் வரும் மாந்தர்களின் பெயர்களையும் சம்ஸ்கிருத ஒலியை
விட்டுத் தமிழ் ஒலிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எழுதினார். சில பெயர்களை அவ்வாறே
தராமல், தமிழில் அவற்றின் பொருளை மொழிபெயர்த்துத் தந்தார். லட்சுமணனை இலக்குவன்
என்றார்; விபீஷணனை வீடணன் என்றார்; ஸுபர்ணனை உவணன் என்றார்; ஸ்வர்ணவர்ணனை
சுவணவண்ணன் என்றார்; கனகமேனி என்றும் மொழிபெயர்த்தார். யக்ஞ விரோதனை, வேள்விப்
பகைஞன் என மொழிபெயர்த்தார். அஹல்யாவை அகலிகை அல்லது ஆலிகை என்று எழுதினார்.
இவ்வாறு வடசொற்களை மிகுதியாகக் கலக்கும் முயற்சி ஒருபுறம் நடக்க, தேவையான சில
வடசொற்களைமட்டும் தமிழ் ஒலிக்கு ஏற்றபடி மாற்றி யமைக்கும் முயற்சி ஒருபுறம் நடந்தது.
தமிழ்ச் சொற்களும் தமிழ் ஒலிகளும் காக்கும் முயற்சியே வெற்றி பெற்றது.
பிறர்
தொடர்பு
பல்லவர்களின்
ஆட்சி பத்தாம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது; சோழர்கள் மறுபடியும் தலையெடுத்தார்கள்;
பெரிய வல்லரசாக ஓங்கினார்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவர்களும் வீழ்ச்சியுற்றார்கள்.
முகம்மதியர் படையெடுப்பால் நாடு கலங்கியது. விஜயநகர ஆட்சியின்கீழ், நாயக்க மன்னர்கள்
தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெற்றார்கள். தெலுங்கு மொழி
|