பக்கம் எண்: - 21 -

பேசுவோர் தமிழரோடு உறவு கொண்டார்கள். தமிழ்நாட்டு ஆழ்வார் பாடல்கள் தெலுங்கில் இடம் பெற்றன. கன்னட நூல்கள் பிரபுலிங்க லீலை முதலியன தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. கன்னடத்தில் தமிழ் நாயன்மார்களின் வரலாறுகள் எழுதப்பட்டன. திராவிட மொழிகளுக்குள் உறவு ஏற்பட்டது. மராத்திய சரபோஜி மன்னர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டார்கள், மராத்திச் சொற்கள் சில தமிழ்ப் பேச்சில் கலந்தன. முகம்மதியரின் ஆட்சி ஏற்பட்டது. பாரசீக அரபியச் சொற்கள் பல, தமிழர் பேச்சிலும் ஆட்சித் துறையிலும் கலந்தன. அடுத்து, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் டச்சுக்காரர், போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலானவர்களின் வாணிக உறவாலும் ஆட்சியாலும், ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல வந்து கலந்தன; அச்சு யந்திரம் வந்தது; உரைநடை வளர்ந்தது. ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியா முழுவதும் நிலைத்த பிறகு, ஆங்கில மொழியின் வாயிலாக, ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வடிவங்களும் தமிழிற்கு எட்டின. நாவல்கள், நாடகங்கள், பிறகு சிறு கதைகளும் ஐரோப்பிய இலக்கியங்களைப் பின்பற்றித் தமிழில் இயற்றப்பட்டன. இவ்வாறு 1947-இல் விடுதலை பெறும்வரையில், பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாடு வேறுமொழிகள் பேசுவோரின் ஆட்சிகளின்கீழ் இருந்து வந்தது. அத்தனை மாறுதல்களும் தமிழிலக்கிய வளர்ச்சியில் ஒரளவு இடம் பெற்றன; ஆயினும், அதன் வளர்ச்சி இடையறாமல் நடந்து வந்தது.

செய்யுள் வகைகள்

தமிழலக்கியம் தொடங்கிய காலத்தில் அகவல், கலிப்பா, பரிபாடல் என்னும் செய்யுள் வகைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அகவல் என்பது ஒவ்வோர் அடியிலும் நான்குசீர்கள் உடையதாய், மூன்று அடிமுதல் நூற்றுக்கணக்கான அடிகள்வரையில் அமைந்தது (சீர் என்பது இரண்டு அல்லது மூன்று அசை உடையது. அசை என்பது ஒன்று அல்லது இரண்டு உயிரெழுத்துக் கொண்டது); அது, உரைநடைபோலவே தொடர்ந்து அமைவது. எதுகை மோனைகளைக் கொண்டு, நான்கு நான்கு சிறு சீர்களாக ஒலிப்பதுதான் வேறுபாடு. பழங்காலத்தில் உரைநடையும் நான்கு நான்கு சீர்களாக அமைய எழுதப்படுவது உண்டு. சிலப்பதிக்காரத்தின் இடையிடையே வரும் உரைநடையிலும், பிறகு வந்த உரையாசிரியர்களின் எழுத்திலும் அந்த அமைப்பைக் காணலாம். கலிப்பா என்பது, நான்கு சீர்கள் கொண்ட அடிகள் உடையதே; ஆனால் அதன் சீர்களின் அமைப்பு, துள்ளித் துள்ளி வரும் ஓசையைத் தரும். அதனால் துள்ளல் ஓசை என்று கூறப்படும்.