பரிபாடல்
என்பது ஒருவகை நெகிழ்ச்சியான ஒலியமைப்பு உடையது. கலிப்பாவும் பரிபாடலும் நாட்டுப்பாடல்
வடிவத்தோடு ஒட்டி அமைந்த வடிவங்களாக இருக்கவேண்டும். அவை ஒரே வகையாக நீண்டு செல்வன
அல்ல; சிலவகை உறுப்புகள் கலந்து மாறிச் செல்வன. காதல் பாடல்களைப் பாடுவதற்கு அவை
உரியவை என்று தொல்காப்பியம் என்ற பழைய இலக்கண நூலில் கூறப்படுகிறது. தொல்காப்பியத்தில்
விரிவாகச் செய்யுள் வடிவங்களின் இலக்கணம் கூறப்படுகிறது. அங்கு வெண்பா என்ற செய்யுளும்
கூறப்படுதல் காணலாம். சங்க இலக்கியத்திற்குப் பிறகு, கி. பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுக்குப்
பிறகே வெண்பா செல்வாக்குப் பெற்றது. அதன் பிறகு பரிபாடலும் கலிப்பாட்டும் அவ்வளவாகப்
போற்றப்படவில்லை. அகவலும் வெண்பாவும் இன்றுவரையில் போற்றப்பட்டு வருகின்றன.
இவை அத்தனையும் தவிர, பண்ணத்தி என்ற ஒன்றும் தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.
அது, அக்காலத்தில் இசையோடு பாடப்பட்ட இசைப் பாடல்களிலிருந்து இலக்கியப் பாட்டிற்கு
கொள்ளப்பட்ட வடிவம் எனலாம். இசைப் பாடல்களின் வடிவங்கள் மெல்ல மெல்ல இலக்கியத்தில்
புகுதல் இயல்புதானே? இந்தக் காலத்திலும் அவ்வாறு அமையும் பாட்டு வடிவங்கள் சில உண்டு.
இலக்கணமும் இலக்கியமும் ஏற்பட்ட பிறகு புலவர்கள் பழைய வடிவங்களையே போற்றி வந்தார்கள். நாட்டுப்
பாடல்களில் வளரும் புதிய வளர்ச்சியோடு தொடர்பு கொள்ளாமல் பழைய போக்கிலேயே
எழுதி வந்தார்கள். சிலப்பதிகாரம் என்ற காவியத்தைக் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில்
எழுதிய இளங்கோ, நாட்டுப்பாடல்களின் வடிவங்கள் பலவற்றைத் தம் காவியத்தில் பல
இடங்களில் தந்துள்ளார். கி. பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் பக்திப் பாடல்கள்
பாடிய ஆழ்வார் நாயன்மார்களும் தம்முடைய பக்திப் பாடல்களில் அவற்றை அமைத்துப்
பயன்படுத்தினார்கள். அவற்றிலிருந்து அமைந்ததே விருத்தம் என்னும் செய்யுள் வடிவம்.
அதை முதல்முதலில் ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு பெரிய காவியத்திற்குப் பயன்படுத்தினார்
திருத்தக்கதேவர் என்னும் சைனப் புலவர். அவருடைய சீவக சிந்தாமணியில் உள்ள மூவாயிரத்துக்கு
மேற்பட்ட செய்யுள்கள் எல்லாம் விருத்தம் என்ற இந்த வகையில் அமைந்தவைகளே. அதுவரையில்
தோன்றிய பெரிய காவியங்கள் எல்லாம் அகவல் என்னும் பழைய வடிவத்தையே பயன்படுத்தின.
திருத்தக்கதேவர் விருத்தத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தி வெற்றி கண்ட பிறகு,
தோலாமொழித்தேவர் சேக்கிழார் கம்பர் முதலான புலவர் பலரும் அதையே பயன்படுத்தலானார்கள்.
இன்று வரையில் மிகுதியாகப் பயன்படும் செய்யுள் வகை விருத்தமே ஆகும். விருத்தம் என்ற
சொல் வடசொல்லாக இருந்தபோதிலும், அதற்கும் வடமொழியின் செய்யுளிலக்கணத்துக்கும்
|