பக்கம் எண்: - 23 -

முதலியவைபோல, ஓர் அடியில் நான்கு சீர் இருக்க வேண்டும் என்ற வரையறை அதில் இல்லை. நான்கு சீரும் இருக்கலாம்; ஐந்து ஆறு ஏழு எட்டு எனப் பல சீரும் இருக்கலாம்; நாற்பது சீரும் இருக்கலாம். ஆனால் நான்கே அடிகள் இருக்க வேண்டும்; முதல் அடியில் எத்தனை சீர்கள் வந்தனவோ, அத்தனை சீர்களே அதே முறையிலே மற்ற அடிகளிலும் வரவேண்டும். சீர்கள் நீண்டும் இருக்கலாம்; குறுகியும் இருக்கலாம். அதனால் விருத்தம் என்னும் செய்யுள் கணக்கற்ற வகையில் வேறுபடுவதற்கு இடம் ஆயிற்று; பலவகை உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி பல்வேறு வகையில் சொற்கள் அமைந்து வெவ்வேறு ஓசைகள் பிறக்க வழி ஏற்பட்டது. ஆகவே, விருத்தம் உணர்ச்சிகளுக்கு ஏற்ற வடிவம் தருவதற்கு மிக நன்றாக உதவுகின்ற செய்யுள் வடிவம் ஆயிற்று.

இவ்வளவு சிறந்த கருவியாகப் பயன்படும் விருத்தம் போதாது என்று, மறுபடியும் நாட்டுப் பாடல் வடிவங்களைத் தேடிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள், பதினேழாம் நூற்றாண்டில். மக்கள் பாடிவந்த சிந்து, கண்ணி, கும்மி முதலானவற்றை இலக்கியத்தில் அமைக்கத் தக்க வடிவங்களாகப் புகுத்தினார்கள். இந்த நூற்றாண்டு வரையில் அந்த முயற்சி வளர்ந்துவருகிறது. பாரதியார், தெருவில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் கோணங்கியின் பாட்டின் இசையையும் பாரதிதாசன் கழைக்கூத்தாடியின் பாட்டின் இசையையும் தந்திருக்கிறார்கள். இசைக்கலைஞர்களின் பாடல்களில் உள்ள கீர்த்தனை முதலான வடிவங்களையும் இன்று புதிய இலக்கியங்களில் காணலாம். இவைகளும் போதாமல், புதிய புதிய சோதனைகள் செய்துபுது வடிவங்களைக் கண்டு அமைக்கும் முயற்சியும் இன்று இருந்து வருகிறது.

உரைநடை வகைகள்

உரைநடையின் வளர்ச்சியிலும் பல வேறுபாடுகளைத் தமிழில் காணலாம். அகவல்போல் நான்கு நான்கு சீராக எதுகை மோனையுடன் எழுதப்பட்டது பழைய உரைநடை. பிறகு எதுகைமோனை குறைந்து, சீர் அளவும் இல்லாமல், எழுவாய் பயனிலை முடிபுகளை மட்டும் பிறழாமல் கொண்டு எழுதிய உரைநடை அமைந்தது. அதுவும் பேச்சுத் தமிழின் வாக்கிய அமைப்போடு ( syntax) ஒட்டி வந்தது என்று கூறுமுடியாது. ஆராய்ந்து பார்த்தால், கவிஞர்களின் செய்யுள் நடையே கூடியவரையில் பேச்சுத் தமிழின் வாக்கிய அமைப்பை ஒட்டி வந்தது என்றும், பழங்காலத்து உரைநடை அவ்வளவு ஒட்டி வரவில்லை என்றும் கூறலாம். அந்த உரைநடை மிகச் செறிவாக அமைந்தது; கருத்துகளின் சிக்கலும் நுட்பமும் நடையிலும் காணப்பட்டன. பேச்சு வழக்கில் இல்லாத அருஞ்சொற்கள் பல