பக்கம் எண்: - 24 -

ஆளப்பட்டன. காரணம், அந்தக் காலத்தில் உரைநடை புலவர்களின் அளவில்மட்டுமே பயன்பட்டு வந்ததாகும். அதனால் புலவர்களும் நன்றாகக் கற்றவர்களும் அறியத் தக்கதாக இருந்தால் போதும் என்று உரைநடை அமைத்துக்கொண்டார்கள். அச்சு யந்திரம் வந்த பிறகே, உரைநடை என்பது பலர்க்கும் பயன்படத்தக்கது என்ற நோக்கம் ஏற்பட்டது. பலரும் எளிதில் படித்து உணர்ந்து கொள்ளும் வகையில் அருஞ்சொற்கள் குறைந்து, பேச்சு மொழியின் வாக்கிய அமைப்பை ஒட்டி எழுதும் முயற்சி ஏற்பட்டது. வார இதழ், செய்தித்தாள் முதலியன ஏற்பட்ட பிறகு, சென்ற நூற்றாண்டில் உரைநடையில் நெகிழ்ச்சியும் எளிமையும் அமைந்தன. வழக்கில் இல்லாத அருஞ்சொற்கள் அடியோடு விலக்கப்பட்டன. நாவல்களும் சிறுகதைகளும் பலர்க்குப் பயன்பட வேண்டியவை ஆகையால், அவை வளர்ந்த பிறகு, எளிமையும் நெகிழ்ச்சியும் இலக்கிய நடைக்கு உரியவை ஆயின. பலரும் அறிந்த எளிய சொற்களைக் கொண்டே பலவகை உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் அழகிய வடிவம் கொடுக்கும் உரைநடை வளர்ந்தது.

புதிய செய்யுள் வடிவங்கள் வந்த பிறகு பழைய வடிவங்கள் அடியோடு கைவிடப்படவில்லை. பழைய வடிவங்களில் பாட்டு எழுதுவோர் இன்றும் இருந்துவருகின்றனர். அதுபோலவே, எளிய உரைநடை வளர்ந்தபிறகும், அருஞ்சொற்கள் கலந்த உரைநடை எழுதுவோர் இல்லாமற் போகவில்லை. அகவல்போன்ற உரைநடை மறைந்த பிறகும், இன்றும் எதுகைமோனைகள் நிறைந்த உரைநடையும் அடுக்கு அடுக்காகச் சொற்களை அமைத்து எழுதும் உரை நடையும் எழுதுவோர் சிலர் இருந்துவருகின்றனர். ஆதலின் இங்குக் குறிப்பிட்ட வளர்ச்சி பெரும்பாலோரின் எழுத்தில் காணும் மாறுதலைக் கூறுவதாகும்.

இந்த நூலில்

இவ்வாறு காலந்தோறும் சிற்சில மாறுதல் பெற்று வளர்ந்து வரும் தமிழ் இலக்கியத்தின் வரலாறாகிய இந்த நூலில், எல்லா நூல்களைப்பற்றியும் விளக்கம் தர முடியவில்லை. சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் தோன்றியுள்ள நூல்கள் கணக்கற்றவை. இந்த நூற்றாண்டில் அறுபது ஆண்டுகளில் தோன்றிய தமிழ் நூல்களின் எண்ணிக்கை, சென்ற இருபத்துநான்கு நூற்றாண்டுகளின் நூல்களின் எண்ணிக்கையைவிட மிகுதி எனலாம். ஆகையால், அத்தனை நூல்களைப்பற்றியும் இங்குக் குறிப்பிட முடியவில்லை. நூலாசிரியர் எல்லோருடைய பெயர்களையும் விடாமல் குறிப்பிடவும் முடியவில்லை. இலக்கிய வளர்ச்சியின் போக்கைச் சுட்டிக் காட்டுவதற்குத் தேவையான நூல்களின் இயல்புகளும் ஆசிரியர்களின் பெயர்களுமே இங்குக் காணலாம்.