பக்கம் எண்: - 25 -

தவிர, இந்த இலக்கிய வரலாறு, தமிழிலக்கிய தொடர்பு இல்லாதவர்களுக்கு - தமிழ் அறியாத பிற மொழியார்க்குப் பயன்படத் தக்கமுறையில் இத்தனை பக்கங்கள் என்ற ஓர் எல்லைக்குள் நின்று எழுதப்படுவது ஆகையால், நூல்களின் விளக்கங்களோ ஆசிரியர்களின் குறிப்புகளோ விடாமல் குறிக்கவும் இடம் இல்லை; நூல்களின் சிறப்பியல்புகள் பலவற்றை விளக்கவும் இங்கு இடம் இல்லை. அண்மைக்கால இலக்கியங்களைப்பற்றி ஒரு சொல் : இங்குக் குறிக்கப்பட்ட எல்லா நூல்களும் எதிர்காலத்தில் இலக்கியமாக நிலைப்பன என்று உறுதி கூறுதலும் முடியாது : அவற்றில் எத்தனையோ காலவெள்ளத்தில் மறையக்கூடும். இங்குக் குறிப்பிடப்படாத நூல்களுள் சில எதிர்காலத்தில் இலக்கியமாக வாழவும் கூடும். காலவெள்ளம் என் நெஞ்சின் ஆர்வத்தைவிட ஆற்றல் மிகுந்தது.

தமிழ் இலக்கிய வரலாற்றைப் பல வகையாகப் பாகுபாடு செய்வது உண்டு. தமிழ் இலக்கியம்பற்றிப் பிறமொழியார் அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், பின்வரும் பாகுபாடு மேற்கொள்ளப்பட்டது.

பழங்காலம்
சங்க இலக்கியம் : கி. மு. 500 முதல் கி. பி. 200 வரையில்
  அகம் புறம்பற்றிய பாட்டுகள்.
நீதி இலக்கியம் : கி. பி. 100 முதல் கி. பி. 500 வரையில்
  திருக்குறள் முதலிய நீதி நூல்கள்.
  கார்நாற்பது முதலிய வெண்பா நூல்கள்.
பழைய காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலியன.
இடைக்காலம்
பக்தி இலக்கியம் : கி. பி. 600 முதல் 900 வரையில்
  நாயன்மார் ஆழ்வார் பாடல்கள்.
  கலம்பகம் முதலிய பலவகை நூல்கள்.
காப்பிய இலக்கியம் : கி. பி. 900 முதல் 1200 வரையில்
  சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய சமணபௌத்த நூல்கள்.
  இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்.
  சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், ஒளவையார் முதலியவர்கள்.
  உலா பரணி பிள்ளைத் தமிழ்.