சங்கம் என்ற பெயர்
சங்க இலக்கியம என்ற பெயர் எப்படி அமைந்தது? சங்கம் என்பது
அறிஞர் அறவோர் பலர் கூடி அமைக்கும் அமைப்பு. பிற்காலத்தில் (கி. பி. 4, 5 ஆம்
நூற்றாண்டில்) சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் தமிழ்நாட்டில் சங்கம் ஏற்படுத்திக்
கல்வித் தொண்டும் சமயத்தொண்டும் புரிந்தார்கள். அவர்களின் காலத்துச் சங்கங்கள்
போலவே, அதற்கு முந்திய காலத்திலும் புலவர்களின் சங்கங்கள் இருந்திருக்கவேண்டும்
என்றும், பழைய பாட்டுகள் (எட்டுத்தொகை பத்துப்பாட்டின் பாட்டுகள் முதலியவை) அந்தச்
சங்கங்களைச் சார்ந்த புலவர்களால் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்றும் அறிஞர்கள்
கருதினர். பழந்தமிழ் நாட்டில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன என்றும், மதுரையிலும்
கபாடபுரத்திலும் இருந்த முதல் இரண்டு சங்கங்கள் மறைந்தபிறகு, மூன்றாம் தமிழ்ச் சங்கம்
மதுரையில் பாண்டியர்களின் ஆதரவோடு அமைந்து நடந்தது என்றும் கருதப்பட்டது. மூன்றாம்
தமிழ்ச் சங்கத்து நூல்களே எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்று கருதி, அவற்றைச்
சங்க இலக்கியம் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. மதுரையில் புலவர்கள் கூடித்
தமிழை ஆராய்ந்து வந்தார்கள் என்பதற்கும், பாண்டிய மன்னர்கள் அவர்களுக்கு ஊக்கமூட்டி
ஆதரவு நல்கி வந்தார்கள் என்பதற்கும் பழைய பாட்டுகளில் சான்றுகள் உள்ளன. பாண்டியர்களைப்
போலவே சோழ மன்னர்களும் சேர மன்னர்களும் மற்றச் சிற்றரசர்களும் வள்ளல்களும்
புலவர்களுக்கு ஆதரவு நல்கிவந்தார்கள் என்பதும் அப் பாட்டுகளால் தெரிகிறது. அவர்களின்
உதவியும் ஊக்கமும் பெற்ற புலவர்கள், தம் உள்ளத்துக் கற்பனைகளைப் பாடியதோடு நிற்காமல்,
அந்த மன்னர்களையும் வள்ளல்களையும் அவர்களின் நாடுகளையும் ஊர்களையும் வாயாரப் புகழ்ந்து
பாடினார்கள் என்பதும் தெளிவாகிறது. ஆனால், மூன்று சங்கங்கள் இருந்தன, அவை, இன்னார்
இன்னார் தலைமையில் இத்தனை இத்தனை ஆண்டுகள் இருந்தன என்றெல்லாம் பிற்கால அறிஞர்
கூறும் கருத்துக்களுக்குப் போதுமான சான்றுகள் இல்லை. எவ்வாறாயினும், புலவர்கள் அவ்வப்போது
கூடி ஆராய்ந்தார்கள் என்பதும், அவர்களில் சிலருடைய முயற்சியாலேயே சங்க இலக்கியம்
எனப்படும் தொகைநூல்கள் அமைந்தன என்பதும் மறுக்க முடியாதவை.
பழைய மரபுகள்
சங்க இலக்கியப் பாட்டுகளில் காணப்படும் பழைய மரபுகள்
பல உண்டு. காதல்பற்றிய கற்பனையை அகம் என்றும், வீரம் கொடை புகழ்
|