பக்கம் எண்: - 30 -

முதலிய வாழ்க்கைத்துறைகளைப் புறம் என்றும் பகுத்த பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும். அகப்பாட்டுகளில் கற்பனைத் தலைவன் தலைவியின் காதல் பாடப்படும். புறப்பாட்டுகளில் நாட்டை ஆளும் தலைவனுடைய சிறந்த வீரச் செயல்களும் கொடைப் பண்பும் குடிமக்களும் சிறந்தவர்களின் அருஞ்செயல்களும் பிறவும் பாடப்படும். ஆகவே, பெரும்பாலும் அகப்பாட்டுகள் கற்பனையாகவும், புறப்பாட்டுகள் உள்ளது கூறலாகவும் அமைந்துள்ளன எனலாம்.

சிற்றூர்கள் பலவாகவும் நகரங்கள் ஒரு சிலவாகவும் அவற்றிடையே போக்குவரத்தும் கலப்பும் குறைவாகவும் இருந்த காலம் அது. சிற்றூர் மக்கள் மலையிலும் காட்டிலும் வயற்புறத்திலும் கடற்கரையிலும் அமைந்த ஊர்களில் வாழ்ந்து அந்தந்த நிலத்தில் கிடைத்த உணவு பொருள்களுக்காக வேட்டை உழவு மீன் பிடித்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அன்பு அறிவு அழகு வயது முதலியன பொருத்தமாக வாய்ந்த ஆணும் பெண்ணும் காதல்கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர். அத்தகைய காதலும் இல்லறமுமே சிற்றூர்களின் இயல்பான வாழ்க்கையாக இருந்தன. அந்த ஊர்களில் தோன்றி வழங்கிய வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் நாடகங்களும், அந்தக் காதல் வாழ்க்கையையே  மையப்பொருளாகக் கொண்டிருந்தன. சிற்றூர் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் தொழில்களும் அந்த நாட்டுப் பாடல்களில் பாடப்பட்டன. மலை காடு வயல் கடல் ஆகியவற்றின் இயற்கையழகும் சிறப்பும் அவற்றில் பாடப்பட்டன. இயற்கைப் பொருள்களும் தொழில் முதலியவைகளும் வாழ்வுக்காகவே அமைந்தவை ஆகையால், காதல் வாழ்வே அந்தப் பாடல்களின் உரிப்பொருள் என்று போற்றப்பட்டது. அந்த வாழ்வை எடுத்துக்காட்டும் பொருள்களாக உள்ள மரம் விலங்கு பறவை தொழில் முதலியவை கருப்பொருள்கள் எனப்பட்டன. அந்த வாழ்வுக்குப் பின்னணியாக விளங்கிய நிலமும் காலமும் முதல்பொருள்கள் எனப்பட்டன. நிலந்தோறும் இயற்கைப்பொருட்களும் தொழில்களும் பழக்கவழக்கங்களும் வேறுவேறாக இருந்தமையால், நிலத்துக்கு நிலம் நாட்டுப் பாடல்களும் வெவ்வேறு வகையாக அமைந்தன. சங்க இலக்கியம் எழுந்த காலத்தில் அந்த நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைப்பட்டு, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை  என்னும் ஐந்திணைப் பாடல்களாக அமைந்தன. பழங்காலத்து நாட்டுப் பாடல்கள் நமக்குக் கிடைக்க வழி இல்லை. அவற்றின் மரபுகளை ஒட்டிப் புலவர்களால் இயற்றப்பட்ட ஐந்திணைப் பாட்டுகளும் முழுதும் கிடைக்க வழியில்லை. தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ள நூல்களுள் அகப்பாட்டுகள் ஏறக்குறைய 1800 கிடைத்துள்ளன. அக்காலத்து மரபுகளை விளக்கும் இலக்கண நூல்களுள்