அகப்பொருளிலும்
மேற்குறித்த உயர்ந்த காதல்பற்றிய ஐந்து திணைகளோடு கைக்கிளை பெருந்திணை என்று
இரண்டும் சேர்ந்து ஏழு திணை என்பர். கைக்கிளையும் பெருந்திணையும் உயர்வு அற்ற காதலைப்
பாடுவன. கைக்கிளை என்பது ஆண் பெண் இருவருள் ஒருவர்மட்டும் அன்பு கொள்வது. பெருந்திணை
என்பது இருவர்க்குள்ளும் ஒத்த அன்பு அமையாத ஏற்றத்தாழ்வான காதல் நிலை. இவ்வாறு
அமைந்த அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் பற்றியே சங்க இலக்கிய பாட்டுகள் உள்ளன.
எட்டுத் தொகை
எட்டுத் தொகை நூல்களுள் ஐந்து நூல்கள் அகப்பொருள்
பற்றிமட்டுமே பாடப்பட்ட பாட்டுகள் கொண்டவை. அவற்றுள், 13 அடிமுதல் 31 அடி வரையில்
உள்ள பாட்டுகள் நானூறு தொகுத்து அகநானூறு என்று அமைத்தனர். 9 அடி முதல் 12 அடி வரையில்
உள்ளவை நானூறு தொகுத்து நற்றிணை என்று பெயரிட்டனர். 4 அடிமுதல் 8 அடி வரையில் உள்ளவை
நானூறும் குறுந்தொகை ஆயின. 3 அடி முதல் 5 அடி வரையில் உள்ள ஐந்நூறு பாட்டுகளை ஐங்குறுநூறு
என்று தொகுத்தனர். இனிய ஓசைநயம் உள்ள கலிப்பா என்னும் செய்யுள் வகையில் அமைந்த
நூற்றைம்பது பாடல்களை தொகுத்துக் கலித்தொகை என்று அமைத்தனர். இந்த ஐந்து பழைய
தொகை நூல்களும் முழுதும் அகப்பொருள் என்னும் காதல் கற்பனைப்பற்றியவை.
பரிபாடல் என்பதும் இனிய ஓசைநயம் அமைந்த செய்யுள்
வகை. அத்தகைய எழுபது பாடல்கள் கொண்ட தொகைநூலுக்கு பரிபாடல் என்று பெயரிட்டனர்.
அவற்றில் இப்போது கிடைத்துள்ளவை இருபத்திரண்டு. அவற்றுள் சில காதல்பற்றியவை;
சில தெய்வ வழிபாடுபற்றியவை.
பதிற்றுப்பத்து என்பது, சேரநாட்டு அரசர் பதின்மரைப்
பற்றிப் பத்துப் பத்தாகப் பாடப்பட்ட நூறு பாட்டுகள் கொண்ட தொகைநூல். புறநானூறு
என்பது தமிழ்நாட்டு மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள், சிறந்த குடிமக்கள் முதலானோரின்
பெருஞ்செயல்களும் அரும் பண்புகளும்பற்றிப் பாடிய நானூறு பாட்டுகள் உடைய நூல். பொதுவான
உண்மைகளை எடுத்துரைக்கும் சில பாட்டுகளும் இந்தத் தொகுப்பில் உண்டு.
காதல் பாட்டுகள்
காதலைப்பற்றிப் பாடிய பழந்தமிழ்ப் பாட்டுகளில் பெண்களின்
உடல் வருணனை மிகுதியாக இல்லை; காமச் சேர்க்கையைப் பற்றிய குறிப்புகளும் மிகுதியாக
இல்லை. காதலரின் உள்ளத்து உணர்வுபற்றிய பாட்டுகளே மிகுதியாக உள்ளன.
|