வழக்கம் இல்லை. ஆகையால், அந்தப் பாட்டின்கீழ்க் குறிப்பு
எழுதிய பழங்கால அறிஞர் ஒருவர், “இது காதலால் வாடிய காதலி தன் தலைவனுடைய
பிரிவால் மிக நைந்து சாயுங்காலப் பொழுது கண்டு வருந்திக் கூறியது” என்ற கருத்துப்
படக் குறிப்பு எழுதியுள்ளார். அந்தக்குறிப்பைக்கொண்டு பார்க்கும்போதே, இது காதல்பற்றிய
கற்பனை உடைய அகப்பொருள் பாட்டு என்று விளங்கும். இல்லையேல், புலவர் ஒருவர் இயற்கையின்
அழகில் ஈடுபட்டுத் தந்த சொல்லோவியம் என்று கருதித் தடுமாற நேரும்.
மக்களின் நாட்டுப் பாடல்களில் இருந்த இன்னொரு மரபும்
அந்தப் புலவர்களின் காதல் பாட்டுகளில் படிந்துவிட்டது. ஊர்களில் மக்கள் பாடித்
திரியும் பாடல்களில் காதல் பற்றிப் பாடும் போது இன்னாருடைய காதல் என்று குடும்பம்
பெயர் முதலியவற்றைச் சுட்டிப் பாடுவது முடியாதது. வீரம் முதலியவற்றைப் பாடும்போது,
இன்ன தலைவனுடையது என்று அவனுடைய பெயர் முதலியவற்றை குறிப்பிட்டுப் பாடுவதே பெருமைக்கு
உரியதாக இருந்தது. ஆனால் காதல்பற்றிப் பாடும்போது, அது பொதுவான கற்பனையாக - பெயர்
முதலியவை சுட்டாத பாடலாக இருந்தால் தான், அந்தப் பாடலை மக்கள் பலரும் பாடிச் சுவைக்க
முடியும். ஆகையால் நாட்டுப் பாடல்களில் பெயர் குறித்துப் பாடாமல், காதலன் காதலி,
தலைவன் தலைவி என்று பொதுவாகக் கூறிப் பாடுவது என்ற மரபு அமைந்தது. அந்த மரபே சங்க
இலக்கியத்தில் உள்ள அகப் பாட்டுகளிலும் உள்ளது.
வீரம் கொடை முதலியவைபற்றிப் பாடப்பட்ட புறப்பாட்டுகளில்
பொதுவான கற்பனை இல்லை. பெயரும் குடியும் குறிப்பிட்டு, இன்ன அரசனுடைய வீரச்செயல்,
இன்ன வள்ளலின் கொடைப் பண்பு என்று அறியத்தக்கவாறு அந்தப் பாட்டுகள் உள்ளன. ஆகையால்
புறப்பாட்டுகள் பழங்காலத்து மன்னர்கள் தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை
விளக்குவனவாக - வரலாற்றுக்குப் பயன்படுவனவாக - உள்ளன. சுவையாக எடுத்துக் கூறும் முறையில்
நயம் அமைந்துள்ளதே தவிர, நிகழாததைப் படைத்துக் கூறும் வகையில் கற்பனை அவற்றில்
அமையவில்லை.
போர் நிகழ்ச்சி முதலியவற்றைப் பாடும் பாட்டுகளில்
ஏழுதிணையாகப் பாகுபாடு செய்து பாடும் மரபு இருந்தது. பகைவரின் நாட்டுப் பசுக்களைக்
கவர்ந்து போருக்குத் தொடக்கம் செய்வது வெட்சித்திணை. பகைவர் நாட்டின்மேல் படையெடுத்துச்
செல்வது வஞ்சி. பகைவரின் மதிலை முற்றுகையிடுதல் உழிஞை. ஓர் இடம் குறித்து இருவர்
படையும் எதிர்ப்பட்டுப் போர் செய்தல் தும்பை. வெற்றி பெறுதல் வாகை. புகழ்ந்து
பாடுதல் பாடாண். உலக வாழ்வின் நிலையாமை பாடுதல் காஞ்சி.
|