பக்கம் எண்: - 32 -

விரும்பினால், புலவர் அதற்கு ஏற்ற வயல் சார்ந்த மருத நிலத்தையும் அந்த நிலத்து இயற்கைப் பொருட்களையுமே அமைத்துப் பாடவேண்டியிருந்தது. மலையையோ காட்டையோ அமைத்துப் பாடுவதற்கு அந்த மரபு இடம் தரவில்லை. நாட்டுமக்களின் எழுதா இலக்கியமாகிய நாட்டுப் பாடல்களில் அவ்வளவு ஆழமாக அந்த மரபு வேரூன்றியிருந்தபடியால், எழுதும் இலக்கியத்தைப் படைத்த புலவர்களும் அந்த மரபை மீறாமல் போற்ற நேர்ந்தது. அதனால் அக்காலத்து அகப் பாட்டுகளில் இயற்கை வருணனை மிகுந்து விளங்கக் காண்கிறோம். இயற்கையைப் பாடுவதாகவே அமைந்த பாட்டுகள்போல் சில தோன்றும். அவ்வளவு மிகுதியாக இயற்கை வருணனை விளங்குகிறது. ஆனால் உண்மை அது அல்ல. மனிதரின் காதலைப் பாடுதலே அந்தப் பாட்டுகளின் முதன்மையான நோக்கம். அந்தக் காதல் கற்பனைக்குப் பின்னணியாகவும் துணையாகவுமே இயற்கை வருணனை அமைகிறது.

இவ்வளவு மிகுதியாக இயற்கை வருணனை அமைந்த அந்தப் பழைய இலக்கியத்தில், இயற்கையின் அழகில் ஈடுபட்டு இயற்கையை வருணிப்பதே நோக்கமாக அமைந்த பாட்டு இல்லாதது வியப்பாக உள்ளது : இக்காலத்துப் புலவர் பாடுவன போல், சூரியன், திங்கள்; முகில், பூங்கொடி முதலிய இயற்கைப் பொருட்களை மட்டும் (காதல் கற்பனை இல்லாமல்) வருணிக்கும் பாட்டு ஒன்றும் பழைய இலக்கியத்தில் இல்லை.

சூரியன் மேற்கு வானத்தில் சாய்ந்த நேரத்தில் வானத்தில் பறந்து செல்லும் பறவைக் கூட்டத்தைப் பார்த்துப் பாடும் பாட்டு ஒன்று; “கதிரவன் மேற்கே சாய்ந்த அகன்ற வானத்தில் பறந்து செல்லும் அந்தப் பறவைகள் - வளைந்த சிறகுகளை உடைய அந்தப் பறவைகள் இரங்கத் தக்கவை.  அவை கூடுகட்டித் தங்குவதற்கு ஏற்றவாறு ஓங்கி வளர்ந்த மராமரத்தில்  உள்ள தம் குஞ்சுகளின் வாய்க்குள் செருகுவதற்காக இரை எடுத்துச் செல்வதால், அவ்வளவு விரைவாகப் பறந்து செல்கின்றன!”

             ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
          அளியதாமே கொடுஞ்சிறைப் பறவை
          இறையுற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
          பிள்ளை உள்வாய்ச் செரீஇய
          இரைகொண் டமையின் விரையுமால் செலவே.

இந்தப் பாட்டை மேற்போக்காகப் படிப்பவர்க்கு, இது அந்தி வானத்தையோ அங்குப் பறந்து செல்லும் பறவைக் கூட்டத்தையோ பாடிய இயற்கைப் பாட்டாகத் தோன்றும். ஆனால், சங்க இலக்கிய காலத்தில் அவ்வாறு இயற்கையின் அழகில் ஈடுபட்டு, அந்த அழகுணர்ச்சிக்காகவே பாடும்