பக்கம் எண்: - 37 -

ஏந்திக்கொண்டு, மற்றக் கையில் அடிக்கும்கோலை ஏந்தி இதைக் குடி என்று யான் மிரட்டிய காலத்தில், அந்தப் பாலை குடிக்காமல் ஓடுவாள் என் மகள். அவளைப் பிடிக்கச் செவிலித் தாய்மார் ஓடுவார்கள். மகள் அவர்களுக்கு அகப்படாமல் வெளியே ஓடி, முடியாது என்று மறுப்பாள், அவ்வளவு செல்வமாக எங்கள் வீட்டில் வளர்ந்தவள் அவள். இப்போது, தன் கணவனுடைய குடும்பம் வறுமையுற்ற காரணத்தால் வளம் இல்லாமல் வாழ்கிறாள். தந்தையின் செல்வ வளத்தைப் பொருட்படுத்தாமல், எங்கள் வளமான உணவைப்பற்றிக் கருதாமல், உணவு போதாக் குறையால் ஒருவேளை உண்ணாமலும் ஒருவேளை உண்டும் வாழ்கின்ற அளவுக்கு மன வலிமை பெற்றுவிட்டாள். இப்படிப்பட்ட அறிவையும் ஒழுக்கத்தையும் எப்படிக் கற்றாளோ?” இதுபோல், காதலால் மனம் வளரும் வளர்ச்சியையும் தன்னலம் துறக்கும் பண்பின் வளர்ச்சியையும் எடுத்து விளக்கும் சொல்லோவியங்கள் பல உள்ளன. இவ்வளவு உயரிய உணர்ச்சிகள் அப்பாட்டுகளில் வடிக்கப்பட்டமையால், பிறகு வந்த பெரும் புலவர்களும் அவற்றின் மரபுகளை விடாமல் போற்றிக் கையாண்டுள்ளனர்.

கலித்தொகை

கலித்தொகையில் உள்ள காதல் பாட்டுகள் நல்ல சொல்லோவியங்களாக இருப்பதோடு, இனிய ஓசைநயம் உள்ளவைகளாகவும் இருக்கின்றன. அவற்றின் தாழிசைகள் பழங்காலத்து மக்கள் பாடலின் இனிய ஓசையை ஒட்டி அமைந்தவை. ஒரே கருத்தையோ உணர்ச்சியையோ மூன்று தாழிசைகளில் மூன்று முறை ஒரே வகை ஓசையில் உணர்த்தும் அந்தத் தாழிசைப் பாட்டுகள் உள்ளத்தைத் தொடும் இனிமை உடையவை. மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டதை அறிந்த தாய் கலங்கி வருந்தும்போது, அவளுக்கு ஆறுதல் கூறும் பெரியவர் ஒருவர், “அம்மா, சந்தனம் மலையில் பிறக்கிறது. ஆனால் மலைக்குப் பயன்படுவதில்லை; பூசிக்கொள்பவர்க்குப் பயன்படுகிறது. உன் மகளும் உன்னைவிட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதும் அவ்வாறு இயற்கையே. முத்து கடல்நீரிலே பிறக்கிறது. ஆனால் கடலுக்கு அதனால் என்ன பயன்? அணிபவர்க்கே பயன்படுகிறது. உன் மகளும் அப்படியே. இசை யாழிலே பிறக்கிறது. ஆனால் அந்த யாழுக்குப் பயன்படுவதில்லை. கேட்பவர்க்கே பயன்படுகிறது. உன் மகளும் அப்படியே” என்று உணர்த்தும் பாட்டு குறிப்பிடத் தகுந்தது.