சீர்கெழு
வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே.
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே.
பரிபாடல் என்னும் தொகைநூலில் உள்ள பாடல்களும் இசை
நிரம்பியவை. அந்தக் காலத்தில் அவை இசையொடு பாடப்பட்டு வந்தன. அந்தப் பாடல்கள்
ஒவ்வொன்றின் கீழும் இசைவகுத்தவர்பற்றிய குறிப்பும் இன்ன பண் என்ற குறிப்பும் உள்ளன.
தெய்வம்பற்றியும், காதல்பற்றியும் பாடிய பாடல்கள் இந்த நூலில் உள்ளன. அந்த இரு
பொருள் பற்றியும் இசையோடு பாடப்பட்டு வந்த மரபு இதனால் அறியப்படுகிறது. சங்க காலத்திற்குப்
பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவும் போற்றப்படாமல் போயிற்று. விருத்தப்பாட்டு
வளர்ந்தபிறகு கலிப்பாட்டும் போற்றப்படவில்லை.
இயற்கை வருணனை
சங்ககாலப் புலவர்கள் காதலையும்,
வீரம் கொடை முதலியவற்றையும் பொருளாகக் கொண்டு பாடியபோதிலும், நிகழ்ச்சிகளுக்குப்
பின்னணியாக அவர்கள் அமைத்த இயற்கைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
வானத்தின் விந்தையான காட்சிகள், மலையின் எழிலான தோற்றங்கள், காடுகளின் அழகிய
மரஞ்செடி கொடிகள், ஓடியாடும் விலங்குகள், கூடுகட்டி வாழும் பறவைகள், வயலின் நெற்கதிர்கள்,
குளங்களில் தாமரை முதலிய பூக்கள், கடற்கரையின் சோலைகள், உப்பங்கழிகள், கடலலைகள்,
பருவக்காற்றுகள் முதலிய பலவும் அவர்களின் உள்ளம் கவர்ந்து விருந்து அளித்தன. அவர்கள்
பெற்று மகிழ்ந்த இயற்கையழகு என்னும் விருந்தைப் பிறரும் நுகருமாறு சொல்லோவியங்களாகத்
தீட்டி அளித்துள்ளார்கள். ஆனால், எல்லாப் பாட்டுகளிலும் முதன்மையான நோக்கம் காதல்
அல்லது வீரம் கொடை முதலியவற்றைப் பாடுவதே; இயற்கையின் அழகு காதல் நிகழ்ச்சிக்கோ
மற்ற நிகழ்ச்சிக்கோ பின்னணியாக வந்த இரண்டாம் இடமே பெறுகிறது. ஆயினும், அந்தப்
பாட்டுகளின் இயற்கை வருணனை மறக்க முடியாதவாறு நெஞ்சில் அழகுணர்ச்சியைப் பதியச்
செய்கிறது. பிற்காலத்தார் அந்த வருணனைகளைப் போற்றித் தம் நெஞ்சத்தைப் பறிகொடுத்துள்ளனர்
என்பது பல குறிப்புகளால் விளங்குகிறது. சங்கப் பாட்டுகள் பல அங்கங்கே சிதறிக்கிடந்து
பிறகு வந்தவர்கள் அவற்றைத் தொகுக்க முற்பட்டார்கள் அல்லவா? அப்போது, சில ஊர்களில்
சிலபல பாட்டுகள்மட்டும் கிடைத்தன;
|