பக்கம் எண்: - 40 -

சங்கப் புலவர்கள் பலர் மலையையும் காட்டையும் வயலையும் சார்ந்த சிற்றூர்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களின் பெயர்களுக்கு முன்னே அடையாக உள்ள ஊர்ப்பெயர்கள் இந்த உண்மையை அறிவிக்கின்றன. அவர்கள் பாடிய பாட்டுகளில் உள்ள ஊர்களின் பெயர்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆகையால் அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி, இயற்கையைக் கூர்ந்து நோக்கி உணர்ந்து, அழகிய காட்சிகளைப் பாட முடிந்தது. மதுரை, வஞ்சி முதலான நகரங்களில் வாழ்ந்த புலவர்களும் அடிக்கடி கிராமங்களுக்குச் சென்று மலை காடு முதலியவற்றின் அழகைக் கண்ணாரப் பருகித் தம் பாட்டுகளில் வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். புலவர்கள் மானம் நிறைந்தவர்கள்; வறுமையால் வாடிய நிலையிலும் பிறர்க்குத் தாழ்ந்து பணிந்துபோக முடியாத பெருமிதமான மனநிலை பெருஞ்சித்திரனார் முதலான புலவர் பலர்க்கு இருந்தது. அதனால், புலவர்கள் செல்வர்களின் முன்னே நின்று கெஞ்சிக் கேட்பதாகப் பாட்டுகள் இல்லை. மோசிகீரனார் என்ற புலவர் கொண்கானத்துத் தலைவனை அணுகிப் பொருளுதவி கேட்டபோது, “எனக்குப் பொருள் கொடு என்று இரந்து கேட்க என்னால் இயலாது; ஆனால் உன்னுடைய மலையைப் புகழ்ந்து பாடுவது எனக்கு விருப்பமான செயல், எளிமையான செயல்” என்று கூறி அவன் மலையைப் பாடினார். இயற்கையைத் தெய்வமாகப் பாடும் முறையும் அக்காலத்தில் தோன்றவில்லை; இயற்கைப்பொருள்களில் தெய்வத்தின் தன்மையைக் கண்டு உருகிப் பாடும் முறையும் பரிபாடல் தவிர மற்றப் பழைய பாட்டுகளில் இல்லை. ஆனால், இயற்கையைப் பாடுவதில் ஒப்பற்ற ஆர்வம் புலவர் எல்லோர்க்கும் இருந்தது. அதனால் காதல் வீரம் கொடை முதலியவற்றுள் எதைப் பற்றிய பாட்டிலும் இயற்கை வருணனை நிரம்ப இடம் பெற்றது. நொச்சி மரம், தினைப்பயிர், வயலைக்கொடி, முல்லைக்கொடி, கிளி, அன்னம், நாரை, நண்டு, தேனீ, நிலா, கதிரவன், கடல், மழை முதலியவற்றை நேரே விளித்துப் பாடும் பாட்டுகளும் சங்க நூல்களில் உள்ளன.

பிற்காலத்தில் வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பும் தழுவலும் தமிழில் அமையும் காலம் வரைக்கும், அகத்தினை புறத்திணை மரபுகள் தமிழிலக்கியத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. புறத்திணை மரபுகளைவிட அகத்திணை மரபுகள் தமிழிலக்கியத்தில் ஆழ வேரூன்றியவைகளாக விளங்கின.

        வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
        சாரல் நாட செவ்வியை ஆகுமதி
        யார் அஃது அறிந்திசி னோரே சாரல்
        சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்
        உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.