பக்கம் எண்: - 41 -

இது அகப்பொருள்பற்றிய சிறிய பாட்டு : குறுந்தொகையில், உள்ளது. காதலனும் காதலியும் அன்புகொண்டு பழகியும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் நிலையில், காதலியின் தோழி அவளுடைய நன்மை கருதி, காதலனிடம் கூறும் அறிவுரை இதில் உள்ளது. “மூங்கில் வேலியாக வளர்ந்துள்ள, வேரில் காய்க்கும் பலா மரங்களை உடைய மலைச்சாரல் நாட்டுக்கு உரிமை உள்ளவனே! தக்கவனாக நடந்துகொள் (தக்க வழியில் நடந்துகொள்). யார் அதை அறிவார்? மலைச்சாரலில் சிறிய கிளையில் பெரிய பலாப்பழம் தொங்குவதுபோல், இவளுடைய உயிர் மிகச் சிறியது; இவள் கொண்ட காதலோ பெரியது” என்பது இதன் பொருள். மலைச்சாரலின் இயற்கை வருணனை இதில் அமைந்துள்ளது. மூங்கில், வேர்ப்பலா இவற்றைக் காண்கிறோம். காதலியின் களவொழுக்கத்தில் காதல் தாங்கமுடியாத சுமை போன்றது என்ற கருத்தும் பெரிய பலாப்பழத்தைத் தாங்கும் சிறிய கிளைபற்றிய உவமையால் விளங்குகிறது. இவ்வாறே திருமணம் செய்துகொள்ளாமல் களவொழுக்கமாக வாழ்தல் உயிர்வாழ்க்கைக்குத் துன்பமானது என்ற குறிப்பும் உள்ளது. இயற்கை வருணனையில் உள்ள வேர்ப்பலா நல்ல அறிவுரையைக் குறிப்பால் புலப்படுத்துகிறது. எவ்வளவு பெரிய பலாப்பழமாக இருந்தாலும் வேரில் காய்த்துப் பழுத்தால், வேர்க்கு ஒருவகைச் சுமையும் இல்லை; இடையூறும் இல்லை. அதுபோல் திருமணம் செய்துகொண்டு ஊரார் அறிய இல்லறம் நடத்தினால், காதல் தாங்கக்கூடியதாகும், துன்பமற்றதாகும் என்ற குறிப்பினால் விரைவில் திருமணம் செய்துகொண்டு இவளைக் காப்பாற்று என்ற அறிவுரை அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் உள்ள ஆயிரத்து எண்ணூற்றுக்கு மேற்பட்ட அகப்பாட்டுகள் இந்தப் போக்கில் அமைந்துள்ளன. அவை எல்லாம் காதலி, தோழி, தாய், காதலன், அவனுடைய நண்பன் முதலானவர்களுள் யாரேனும் ஒருவர் கூறும் கூற்றாக நாடகப்போக்கில் அமைந்துள்ளன. ஒருகூற்று நாடகம் ( Dramatic monologue) என்ற வகையிலேயே ஒவ்வொர் அகப்பாட்டின் அமைப்பும் உள்ளது. கற்பனை மாந்தரின் பேச்சாக உள்ளதே தவிர, பாடும் புலவர் அங்கே இருப்பதில்லை. அவர் படைத்த நாடக மாந்தர் பேசுதல் உண்டே தவிர, அவர் பேசுவதில்லை. அங்கு அமையும் இயற்கை வருணனை ஆழ்ந்த குறிப்புப் பொருள் உடையதாக விளங்கும் பாட்டுகள் பல. இயற்கை வருணனை சில பாட்டுகளில் நீண்டு பல அடிகளில் அமையும். சில பாட்டுளில் சுருக்கமாக இரண்டு மூன்று அடிகளில் நிற்கும். ஒரு சில பாட்டில் இல்லாமலும் இருக்கும்.