பக்கம் எண்: - 42 -

 

          அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
           உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
           வரையா மரபின் மாரி போலக்
           கடாஅ யானைக் கழற்கால் பேகன்
           கொடைமடம் படுதல் அல்லது
           படைமடம் படான்பிறர் படைமயக் குறினே.

இது புறப்பொருள்பற்றிய சிறியதொரு பாட்டு; பேகன் என்ற வள்ளலைப் பரணர் என்ற புலவர் பாடியது. பேகன் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற வள்ளலாக விளங்கிப் பலர்க்கும் உதவி புரிந்தவன். ஈர நெஞ்சம் உடைய அவன் பெரிய வீரனாகவும் விளங்கினான். ஈர நெஞ்சத்தோடு பொருளை வாரி வழங்கியபோது, இன்னார்க்குக் கொடுக்கவேண்டும், இன்னார்க்குக் கொடுக்கக்கூடாது என்ற வரையறை இல்லாமல், கேட்டவர் எல்லார்க்கும் வாரிக் கொடுத்தான். அவனுடைய அத்தகைய கொடைச்சிறப்பைப் புகழ்ந்த புலவர், அவனை மழைக்கு ஒப்பிட்டார். மழை பெய்யும்போது, நீர் பயன்படும் குளத்திலும் பொழிகிறது; வயலிலும் பொழிகிறது. ஒரு வகையிலும் பயன்படாத உவர்நிலத்திலும் பொழிகிறது. மழைக்குள்ள அந்த அறியாமை பேகனிடத்திலும் இருந்தது என்கிறார் புலவர். ஈர நெஞ்சத்தால் தக்கவர் தகாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் பொருளுதவி செய்தபோதிலும், வீர நெஞ்சத்தோடு போர்க்களம் புகுந்து எதிரிகளின் படைகளோடு போர் செய்யும் போது அந்த அறியாமையைப் பேகனிடம் காணமுடியாது. போர்க்களத்தில் இன்னாரைத் தாக்கவேண்டும், இன்னாரைத்தாக்ககூடாது என்ற தெளிவுடன் போர்செய்யும் சிறந்த வீரன் அவன். ஆகவே, பேகனிடம் கொடைமடம் உண்டே தவிர, படைமடம் இல்லை என்று கூறி அவனுடைய கொடை, வீரம் ஆகிய இரு சிறப்புகளையும் ஒருங்கே புகழ்ந்து பாடினார்.

புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் உள்ள பாட்டுகள் பெரும்பாலும் இவ்வாறு புலவர் கூறும் கூற்றாகவே அமைந்திருக்கும். ஒருசில பாட்டுகள்மட்டும் பாணன், விறலி முதலானவர்கள் கூறும் கூற்றாக ஒருகூற்று நாடகம் ( Dramatic monologue) என்ற வகையில் அமைந்திருக்கும். சில பாட்டுகள் பொதுவான வாழ்க்கை உண்மைகளை எடுத்துக் கூறும்.

 பலவகைப் புலவர்கள்

 இந்தச் சங்க இலக்கியப் பாட்டுகள் 2381. இவற்றைப் பாடிய புலவர்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 473 பேர். 102 பாட்டுகளுக்குப்