பழையனவாய் வழிவழியாக வரும் கதையிலக்கியம் (தொன்மை) முதலியவைபற்றிய குறிப்புகள்
உள்ளன. இறுதியில், இலக்கியத்திற்கு உரிய சொல்மரபு முதலியவைபற்றி ஆராய்ந்து கண்டவற்றை
எடுத்துக் கூறியுள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழிலக்கியம் பற்றி இந்த அளவிற்கு
ஆராய்ந்து எழுதியுள்ளது போற்றத்தக்கதாக உள்ளது. மேலைநாட்டார் இலக்கிய ஆராய்ச்சிக்கு
அரிஸ்டாட்டிலின் நூலை அடிப்படையாகவும் தொடக்கமாகவும் கொண்டுபயன் பெறுவது போல்,
தமிழறிஞர்கள் தொல்காப்பியத்தின் இந்த மூன்றாம் பகுதியை ஆராய்ந்து பயன் பெறுகிறார்கள்.
ஏறக்குறைய 1600 சூத்திரங்கள் கொண்டு விரிவாக அமைந்துள்ள தொல்காப்பியத்தில்,
இந்த மூன்றாம் பகுதி 650 சூத்திரங்கள் கொண்டது ஆகும். தமிழிலக்கியம் காலப்போக்கில்
பல்வேறு வகையாக வளர்ந்து விரிவுபெற்று, இந்த நூலின் விதிகளைக் கடந்து நின்ற போதிலும்,
பழந்தமிழ் இலக்கியத்தை ஆராய்வோருக்கு இன்றும் இது பயன்பட்டு வருகிறது. மேலே காணப்பட்ட
எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் தொகைநூல்களில் உள்ள மரபுகள் பலவற்றைப்பற்றிய
நல்ல விளக்கம் இந்த நூலின் மூன்றாம் பகுதியாலும் இதற்கு உரையாசிரியர்கள் எழுதிய
உரையாலும் பெற முடிகிறது.
|