பக்கம் எண்: - 63 -

உவமைக் களஞ்சியம்

பிற்காலத்து நூல்களில் வரும் உவமைகள் பலவும் சங்கப் பாட்டுகளுக்கு கடன்பட்டவை எனலாம். சங்க நூல்களில் அந்த உவமைகள் இயல்பாக அமைந்து காணப்படுகின்றன. அந்தப் பழங்காலப் புலவர்களால் அமைத்துத் தரப்பட்ட உவமைகளைப் பிற்காலத்தார் அவ்வாறே பின்பற்றி வழங்கியுள்ளனர். காதலியை விட்டுப் பிரிந்து அயல்நாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த காதலன், ஒரு குன்றின்மேல் எழுந்துவரும் முழுமதியைப் பார்த்து, “எனக்கே உரிமையான ஒரு மதி அதோ அந்த மலைக்கு அப்பால் உள்ளது” என்று தன் காதலியின் முகத்தை நினைந்து பாராட்டினான். பிரிவாற்றாமையால் வாடி ஒளி இழந்த ஒருத்தியின் முகம் விடியற்காலத்துச் சந்திரனுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. எட்டாம் பிறைச் சந்திரன் நெற்றிக்கு உவமையாக்கப்பட்டது. நெய்தல், குவளை முதலான சில மலர்கள் மகளிர் கண்ணுக்கு உவமை ஆயின. அழுது கண்ணீர் சொரியும் கண்கள், பெய்யும் மழையால் நனைந்து நீர் சொட்டும் மலர்களாக உள்ளன. மாவடுப் போன்ற கண் என்று பிற்காலத்தில் குறிக்கப்படுகின்றது. இரும்புக் கத்தியால் இரண்டு துண்டு ஆக்கப்பட்ட மாவடுப்போன்றகண் என்ற விளக்கமான உவமை அகநானூற்றில் உள்ளது. அவ்வாறு இரண்டு துண்டு ஆக்கப்படும்போதுதான், நிறம் மாறிக் கண்ணின் கருவிழிக்கும் மற்ற வடிவ அமைப்புக்கும் ஏற்ற உவமைப் பொருத்தம் காணப்படுகிறது. இவ்வாறே பிற்கால இலக்கியத்தில் வரும் உவமைகள் பலவற்றின் பொருத்தம், அவற்றின் பிறப்பிடமாகிய சங்கநூல்களிலேயே தெளிவாகக் கிடைக்கின்றது.

தொல்காப்பியத்தில் இலக்கிய ஆராய்ச்சி

அக்காலத்து இலக்கண நூலாகிய தொல்காப்பியம், எழுத்துக்கும் சொல்லுக்கும்மட்டும் இலக்கணம் எழுதிய நூல் அல்ல. மூன்று பகுதிகள் கொண்ட அந்த நூலின் முதல் பகுதி தமிழ் ஒலிகளை ஆராய்வது; இரண்டாம் பகுதி சொற்கள் சொற்றொடர்களின் அமைப்பை ஆராய்வது. மூன்றாம் பகுதியாகிய பொருளதிகாரம் என்பது, தமிழிலக்கியத்தை ஆராய்வது. அக்காலத்தில் வழங்கிய இலக்கிய நூல்களை ஆராய்ந்து, அவற்றின் பாகுபாடு, அமைப்பு, பொருள்வகை ஆகியவைபற்றித் தொல்காப்பியர் விளக்கியுள்ளார்; பிறகு நாடகக் கலையை ஒட்டி இலக்கியத்தில் அமையும் மெய்ப்பாடுகளை விளக்கியுள்ளார் : அடுத்து, பாட்டுகளில் பயன்படும் உவமைகளையும் ஆராய்ந்துள்ளார். அதன் பிறகு, செய்யுள் வகைகளை விரிவாக ஆராய்ந்து யாப்பிலக்கணம் வரைந்துள்ளார். அந்தப் பகுதியில் பொய்யான கற்பனை, எழுதப்படாமல் வாயளவில் வாழும் மக்கள் கலையான நாட்டுப்பாடல்கள், உரைநடை முதலியவைபற்றிய குறிப்புகளும் உள்ளன. புதியனவாய்ப் படைக்கும் கற்பனை (விருந்து),