அங்கே பலவகைப் பொருள்களை விற்பவர்கள் கூடிச் செய்யும் ஆரவாரம் திருவிழா ஓசைபோல்
கேட்கிறது. நெடுந்தெருக்களைச் சுற்றி அந்தக் கடைகளைக் கண்டு வருவதற்குள் முற்பகல்
பிற்பகலாக மாறிவிடுகிறது. அந்நிலையில் மாலைக்கடைகளை - அல்லங்காடிகளைக் காண்கிறோம்.
அப்போது கோயில்களில் இசைமுழக்கம் கேட்கிறது. பௌத்தப் பள்ளிகளில் தொழுகை நடக்கிறது.
சைனப் பள்ளிகளில் தவம் செய்யும் பெரியோர்களைக் காண்கிறோம். மாலைக்கடைகளில்
பலவகைத் தொழிலாளர்களின் வேலைத்திறமையைக் காட்டும் பொருள்கள் விற்கப்படுவதைக்
காண்கிறோம். பல வெளிநாட்டு வணிகரைக் காண்கிறோம். அவர்கள் எழுப்பும் வெவ்வேறு
மொழிகளின் ஒலிகள் பலவகைப் பறவைக் கூட்டங்களின் ஒலிகள்போல் உள்ளன. எல்லாவற்றையும்
அந்தக் கடைத் தெருக்களில் பார்த்துச் சுற்றிவருவதற்குள் பகல் மறைகிறது; இரவு தொடங்கிவிடுகிறது.
அங்கங்கே விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். முழுநிலா, தன் கதிர்களைப் பரப்பி
நகரை அணி செய்கிறது. மகளிர் அலங்காரம் செய்து கொள்கிறார்கள். பரத்தையரின்
இன்ப விளையாடல்களும் நடைபெறுகின்றன. நல்ல குடும்பங்களின் கற்புடைய மகளிரின் ஒழுங்கான
கடமைகளும் நடைபெறுகின்றன. பாட்டும் கூத்தும் அங்கங்கே தொடங்கி நடைபெறுகின்றன.
கோயில் வழிபாட்டுக்குக் குழந்தைகளோடு மகளிர் சென்று திரும்புகிறார்கள். முன்னிரவு
மாறி நள்ளிரவு வருகிறது, மக்கள் தம் வீடுகளின் தெருக்கதவுகளைச் சாத்துகிறார்கள்.
அப்ப வாணிகர் முதலானவர்கள் விற்கக் கொண்டுவந்த தின்பண்டங்களைத் தம் எதிரே
வைத்துக்கொண்டே தூங்கத் தொடங்குகிறார்கள். ஊர்க்காவலர் நகரைச் சுற்றித் திரிகிறார்கள்.
இவ்வாறு பல காட்சிகளோடு நள்ளிரவு மாறி வைகறை வருகிறது. மறையோர் மறைகள் ஓதுகிறார்கள்.
வண்டுகள் மலர்களில் இசை தொடங்குகின்றன. இசைக் கலைஞர்கள் யாழிசைத்து வைகறைக்கு
உரிய மருதப்பண் பாடுகிறார்கள். யானைகளும் குதிரைகளும் எழுந்து தீனி தின்கின்றன.
கடைக்காரர் கடைகளை மெழுகி அழகுபடுத்துகிறார்கள். வீடுகளில் மகளிர் எழுந்து கதவுகளைத்
திறந்து துப்புரவு செய்கிறார்கள். திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடப்படுகின்றன.
முரசுகள் முழங்குகின்றன. சேவல்கள் கூவுகின்றன. அன்னங்களும் மயில்களும் ஒலிக்கின்றன.
தெருக்களில் விழுந்த வாடிய மலர்கள் முதலான குப்பைகள் அகற்றப்படுகின்றன. பொழுது விடிகிறது.
இவ்வாறு 354 அடிகளில் மதுரை நகரம் சுற்றிக் காட்டப்படுகிறது. ஒருவர் ஒரு நாள் காலையில்
தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்டவற்றை முறைப்படக்
கூறுவதுபோல் வருணனை அமைந்துள்ளது.
|