பக்கம் எண்: - 61 -

இவ்வாறு சொல்லோவியமாக்கப்படும் காதலியும் காதலனும் இன்னார் என்று அறியப்படவில்லை. அவர்களின் பெயரும் ஊரும் குறிக்கப்படவில்லை.  ஆகவே, கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு, அகப்பாட்டு என ஏற்கலாம். அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபுஇடந் தருகிறது. ஆனால், உரையாசிரியர் அவ்வாறு அதை ஏற்கவில்லை. தலைவனுடைய பாசறை வருணனையில் அவனுடைய வேலுக்கு வேப்பமாலை சூடியிருப்பதாக ஒரு சிறு குறிப்பு உள்ளது. வேப்பமாலை பாண்டிய அரசர் குடிக்கு உரியது. ஆகையால், இன்ன குடி என்று புலப்பட்டுவிடுவதால், இது அகப்பாட்டு ஆகாது என்பது உரையாசிரியரின் கருத்து. வேம்பு என்ற அந்த ஒரு சொல் இல்லையானால், அது முழுதும் கற்பனையான காதல் பாட்டு எனக்கொள்ளத் தடை இருந்திருக்காது. இலக்கிய மரபு அந்த அளவிற்கு வளர்ந்திருந்த காலம் அது. இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.

மதுரைக் காஞ்சி

பத்துப்பாட்டில் மிக நீண்ட பாட்டாக இருப்பது 782 அடிகள் கொண்ட மதுரைக் காஞ்சி. பழந்தமிழ் நகரமாகிய மதுரையின் பலவகை வருணனையும் இதில் காணலாம். இதில் புகழ்ந்து பாடப்படும் அரசன் பாண்டியன் நெடுஞ்செழியன். வாழ்க்கையின் நிலையாமையைக் கூறி நல்வழியை வற்புறுத்துவது காஞ்சித் திணை. மதுரையில் வாழும் தலைவனுக்கு எடுத்துக் கூறிய காஞ்சி ஆகையால் மதுரைக் காஞ்சி எனப் பெயர் பெற்றது. மேற்கு வானத்தில் தோன்றும் வளர்பிறைபோல் பாண்டியனுக்கு வெற்றி பெருக வேண்டும் என்றும், கிழக்கு வானத்தில் தோன்றும் முழுமதி போல் பகைவருடைய மேன்மை தேய்ந்துபோகவேண்டும் என்றும் கூறிப் பாண்டியனைப் புலவர் வாழ்த்துகிறார்.

பாண்டிய மரபைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நெடுஞ்செழியனுடைய முன்னோர் சிலரைப்பற்றியும் அருஞ்செயல்களைப் பற்றியும் உயர்ந்த பண்புகளைப்பற்றியும் விளக்கங்கள் பாட்டில் உள்ளன. ஆயினும் பெரும்பான்மையும் வருணிக்கப்பட்டிருப்பது மதுரை மாநகரமே. நகரத்தை விளக்கும் முறையும் தனிச் சிறப்பாக உள்ளது. ஈராயிரம் ஆண்டுகளாகிய கால எல்லையைக் கடந்து பின்நோக்கிச் சென்று பாண்டிய நாட்டில் புகுந்து, வைகை ஆற்றைக் கடந்து, அகழியையும் மதிலையும் கடந்து சென்று, மதுரை வாயிலில் நுழைந்து பழைய நகரத்தைக் காணுமாறு இப் பாட்டு அழைத்துச் செல்கிறது. அன்று ஒருநாள் காலையில் நெடுந்தெருக்களில் சுற்றிச் சென்று முதலில் காணும் காட்சி காலைக்கடைகள் அல்லது நாளங்காடி என்பவை.