பக்கம் எண்: - 60 -

வீடுகளில் வாழும் புறாக்களின் வாழ்விலும் வாடைக்காற்றின் கொடுமை உணர முடிகிறது. அந்தப் புறாக்கள் வெளியே பறந்து சென்று உணவு தேட முடியவில்லை. குளிர் அவ்வளவு கடுமையாக உள்ளது. வெளியே சிறிது பறந்து உடல் நோய் தீர்த்துக்கொள்ளவும் முடியாமல் மழைத்தூறல் உள்ளது. வீட்டின் உள்ளே ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கால்கள் நோகின்றனவாம். காலை மாற்றி மாற்றி வைத்துக் காலத்தைக் கழிக்கின்றனவாம். வீட்டில் கிடக்கும் சந்தனக்கல்லும் வாடைக்காற்றை நமக்கு நினைவூட்டுகிறது. சந்தனக்கல் கிடந்தபடியே கிடக்கிறதாம், வெயில்காலத்தில் சந்தனம் அரைத்துப் பூசிக்கொள்ள அந்தக் கல் அடிக்கடி பயன்படும். குளிர்காலத்தில் அதைத் தொடுவார் இல்லாதபடியால், இருந்த இடத்திலேயே அப்படியே கிடக்கிறதாம். எடுப்பார் இல்லாத காரணத்தால், விசிறிகளின்மேல் சிலந்திகள் வலைபின்னிக் கிடக்கின்றனவாம். நீர்வேட்கை இல்லாதபடியால், தண்ணீர்க் கூசாக்கள் பயன் இல்லாமல் இருக்கின்றனவாம். குளிர் காய்வதற்குப் பயன்படும் நெருப்புத் தடாக்கள்மட்டும் எங்கும் காணப்படுகின்றனவாம். அடுத்துப் பாசறையில் வாடைக்காற்று வீசக் காண்கிறோம். காதலனாகிய வீரத் தலைவன் நள்ளிரவில் உறக்கம் இல்லாமல், போரில் புண்பட்ட யானைகளையும் குதிரைகளையும் அணுகித் தட்டிக்கொடுத்து அன்பு செலுத்தித் தேற்ற முயல்கிறான். அதற்காக வெளியே செல்லுமிடங்களில், வாடைக் காற்றால் அவனுடைய மேலாடை அலைகிறது; சரிகிறது. அதை அவனுடைய இடக்கை பற்றிச் சேர்க்கிறது. தலைவனுடைய வலக்கை, புண்பட்ட வீரன் ஒருவனுடைய தோள்மேல் அமைந்து அவனுக்கு ஆறுதல் அளிக்கிறது. மழைத்தூறலும் காற்றும் கலந்து அரசனுடைய குடையைத் தாக்கித் ‘தவ்’ என்ற ஒலியை உண்டாக்குகிறது. பாசறையில் விளக்கின் பெரிய சுடர் தெற்குப் பக்கமாகச் சாய்கிறது.

நெடுநல்வாடை என்னும் பெயர்க்கு ஏற்ப, பாட்டு முழுவதும் வாடைக் காற்றின் ஆட்சியைக் காண்கிறோம். பாட்டின் பெயரில் ஒரு சிறப்பும் வாழ்கிறது. அந்த வாடைக்காற்று நெடியதாக - நீண்ட துன்பம் தருவதாக உள்ளது; நல்லதாகவும் உள்ளது. யார்க்கு நெடியது? யார்க்கு நல்லது? அரண்மனையில் கட்டிலில் படுத்தவாறே கலங்கித் துயருற்று, கண்ணீர்த் துளிகளைத் தன் விரல் நுனியால் எடுத்துத் தெறிக்கும் காதலிக்கு அது நீண்டகாலம் வருந்தித் துன்பம் தருவதாக உள்ளது. ஆனால், போர்க்களத்தை அடுத்த பாசறையில் தன் வீரர்களிடமும் வாய் இல்லாத யானை குதிரைகளிடமும் அன்பு செலுத்தி ஆறுதல் அளிக்கும் தலைவனுடைய கடமையுணர்ச்சிக்கு நல்லதாகவே உள்ளது. இவ்வாறு நெடுநல்வாடை என்ற பாட்டின் பெயரில் உள்ள இரண்டு அடை மொழிகளும் (நெடு, நல்) இருவேறு உள்ளங்களையும் அந்த உள்ளங்களின் உணர்ச்சிகளையும் புலப்படுத்துவனாக உள்ளன.