பக்கம் எண்: - 59 -

கற்றறிந்த அறிஞர்களின் வாதங்கள் அரங்குகளில் நடந்தபோது அவர்கள் தமக்கு உரிய வெவ்வேறு கொடிகளை ஏற்றிவந்தார்கள் என்ற செய்தியும் அறியப்படுகின்றன.

நெடுநல்வாடை

காதல்பற்றி மிகச் சிறந்த முறையில் பாடிய மற்றொரு நீண்ட பாட்டும் பத்துப்பாட்டுள் உள்ளது. அது 188 அடிகளால் ஆகிய நெடுநல்வாடை என்பது. காதலன் போர்க்களத்துப் பாசறையில் இருக்கிறான். காதலி அவனுடைய பிரிவால் துயருற்று அரண்மனையில் வாடுகிறாள். பாட்டின் முழு அமைப்பும் ஒரு வழிபாடாக - தெய்வத்திடம் வேண்டுகோளாக உள்ளது. காதலியின் துயரைத் தீர்ப்பதற்கு யாராலும் முடியவில்லை. அரண்மனை மகளிர் கொற்றவையை வேண்டிக்கொள்கிறார்கள். போர்க்களத்தில் பாசறையில் தன் கடமையே பெரிதாகக் கொண்டு அதிலேயே மூழ்கியுள்ள வீரப்பெருமகனாகிய காதலன் போரில் விரைவில் வெற்றிபெற்றுத் திரும்புமாறு அருளவேண்டும் என்று போர்த்தெய்வமாகிய கொற்றவையை (காளியை) வேண்டுகிறார்கள். இதுவே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம். இதைச் சுற்றி வருணனைகள் உள்ளன. காதலியின் அரண்மனை வருணனை உள்ளது; காதலன் உள்ள பாசறை வருணனையும் உள்ளது. இரண்டையும் ஊடுருவிச்செல்லும் வருணனை ஒன்று சிறப்பாக உள்ளது. அதுவே வாடைக்காற்றின் வருணனை. வாடைக்காற்று அரண்மனையிலும் வீசுகிறது; பாசறையிலும் குளிர்ச்சியுடனும் மழைத்துளிகளுடனும் வீசுகிறது. வாடைக்காற்று வானமெல்லாம் பரவுகிறது. மழையைக் கொண்டு வருகிறது. குளிரையும் நடுக்கத்தையும் தருகிறது. காடுகளில் இடையர்களையும் அவர்கள் மேய்க்கும் ஆடுகளையும் தாக்கிக் குளிரால் வருந்தச் செய்கிறது. குரங்கும் குளிர்மிகுந்து நடுங்குகிறது. பறவைகள் குளிர் தாங்கமுடியாமல் விழுகின்றன. ஈன்ற பசுக்கள் பால் உண்ணவரும் தம் கன்றுகளையும் வெறுக்கின்றன. காட்டினுள் வாடைக்காற்றின் ஆட்சியைக் காட்டும் புலவர் பிறகு நாட்டினுள்ளும் அதன் வேகத்தைக் காட்டுகிறார். நகரத்துப் பெருந் தெருக்களில் அதன் கடுமையை வருணிக்கிறார். பெரிய தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. யாரும் நடமாட முடியாத இராக்காலத்துக் குளிரில், குடித்து உணர்வு இழந்து செல்லும் குடிகாரர்மட்டுமே குளிரை உணராமல் சிறு தூறலையும் பொருட்படுத்தாமல் திரிகிறார்கள். இவ்வாறு தெருக்களில் வீசும் வாடைக்காற்றை வீடுகளினுள்ளும் காண்கிறோம். அந்தி வேளையில் மகளிர் விளக்கேற்றி வழிபடுவதற்கு நேரத்தை அறிய முடியாமல், பகலும் இரவும் ஒரே நிகராக வானம் இருண்டுகிடக்கிறது. சில பூக்கள் மலர்வதைக் கண்டு மாலைப்பொழுது வந்துவிட்டது என்று உணர்ந்து விளக்கேற்றுகிறார்கள்.