காதலன் பொருள் தேடும் நோக்கத்தோடு வெளிநாட்டுக்குச்
செல்லும் முயற்சியில் ஈடுபட்டான். பிறகு தன் பிரிவால் காதலி துயருற்று வருந்துவாளே
என்ற கவலை ஏற்பட்டது. அதனால் தயங்கினான். தலைவிக்கு அந்தத் துயரத்தை ஏற்படுத்தக்கூடாது
என்று எண்ணித் துணிந்தான். அந்நிலையில் அவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்தது
இந்தப் பாட்டு. “நெஞ்சமே! செல்வம் மிகுந்த காவிரிப்பூம்பட்டினத்தையே யான்
பெறுவதாக இருந்தாலும், என் காதலியைப் பிரிந்து யான் வெளிநாட்டுக்கு வரமாட்டேன்.
பொருள் தேடுவதற்காக நாம் கடந்து செல்லவேண்டிய காட்டு வழிகளோ கொடுமையானவை; சோழன்
கரிகாலனின் வேலைவிடக் கொடுமையானவை. பிரியவேண்டிய என் காதலியின் தோள்களோ,
சோழன் கரிகாலனின் செங்கோலைவிடத் தண்மையானவை; நல்லவை. ஆகவே இவளைப் பிரிந்து
வெளிநாட்டுக்குச் செல்ல மாட்டேன்” என்பதே பாட்டின் கருத்து. அந்தக் கருத்து
ஆறு அடிகளில் அமைந்துள்ளது. அந்த ஆறு அடிகளில் குறிப்பிடப்படும் (காவிரிப்பூம்பட்டினம்
என்னும்) சோழர் தலைநகரம் நாடு முதலியனபற்றிய வருணனை பாட்டின் முற்பகுதியில் 217
அடிகளில் அமைந்துள்ளது. பாட்டின் பிற்பகுதியில் 80 அடிகளில் சோழனுடைய போர்வீரமும்
சிறப்பும் விளக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் பழங்காலப் பெருமைக்கு ஒரு நற்சான்றாக
அமைந்துள்ளது இந்த நீண்ட பாட்டு. தமிழ்நாட்டில் அக்காலத்தில் ஓங்கியிருந்த கடல்
வாணிகம், பெரிய துறைமுகத்தின் சிறப்பு, வெளிநாட்டார் பலர் வந்து தங்கிய பெருமை,
துறைமுகத்தில் ஏற்றுமதியாகும் பண்டங்களைப்பற்றிய விளக்கம், பண்டங்களுக்குச் சோழனுடைய
புலிமுத்திரை பொறித்துச் சுங்கம் விதித்துவந்த முறை, கடற்கரையில் உலகத்துப் பல
நாடுகளின் பொருள்களும் வந்து குவிந்திருந்த காட்சி, வளம் பெற்றிருந்த பலவகைத் தொழில்கள்
முதலிய விளக்கங்கள் பாட்டில் உள்ளன. கடைத்தெருவை விளக்கும் இடத்தில் வணிகரின்
நடுநிலையான வாணிகமுறை போற்றப்படுகிறது. “தாங்கள் கொள்ளும் பொருளும் மிகுதியாகக்
கொள்ளாமல், கொடுக்கும் பொருளும் குறைவாகக் கொடுக்காமல் பல பண்டங்களிலும் வாணிகம்
நடத்தினார்கள்” என்ற குறிப்பு, பெருமை தருவதாக உள்ளது.
கொள்வதூஉம் மிகைகொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகிர்ந்துவீசும்...
பண்டங்களை விற்பவர்கள், வெவ்வேறு பண்டங்களுக்கு அடையாளமாக
வெவ்வேறு கொடிகளைக் கடைகளில் பறக்கவிட்டார்கள். என்ற செய்தியும்,
|