பக்கம் எண்: - 57 -

பயிர்த்தொழில் குன்றி விளைபொருள் குறையும். ஆகவே, மழைக்காலத்திற்குள் நாட்டுக்குத் திரும்புவது வழக்கமாக இருந்தது. அந்த மழைக்காலத்தின் அறிகுறிகள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இன்னும் தலைவன் திரும்பி வரவில்லையே என்று கவலையுடன் காதலி எண்ணத் தொடங்குகிறாள்; அந்நிலையில், தலைவன் திரும்பிவரும் தேரின் ஓசை அவள் செவியில் கேட்கிறது. இதுவே முல்லைப்பாட்டின் பொருள். இதில் மழைக்காலத்தில் காட்டுநிலங்கள் பெறும் புதிய அழகு நன்றாக வருணிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப் பாட்டு

குறிஞ்சிப்பாட்டு 261 அடிகள் கொண்ட காதல் பாட்டு. பெற்றோர் அறியாமல் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் காதல் வளர்கிறது. காதலன் காதலியைக் காண்பதற்காக வருவதில் எவ்வளவோ இடையூறுகள் உள்ளன. அவன் வர முடியாமல் போகும் நாட்களில் மிக வாடி மெலிகிறாள். அவளுடைய மெலிவை ஏதோ நோய் என்று எண்ணிக் குடும்பத்தார் வேறு பரிகாரம் தேட முயல்கிறார்கள். அந்நிலையில் காதலியின் தோழி குறுக்கிட்டு மெலிவுக்குக் காரணம் இன்னது என்று உண்மையை எடுத்துரைக்கிறாள். மறைந்த நிலையில் வளர்ந்த காதலைப்பற்றித் தாயின் உள்ளம் ஏற்கும் வகையில் எடுத்துச் சொல்கிறாள். பாட்டின் முடிவில் காதலியின் கண்ணீர் காட்டப்படுகிறது. பாட்டின் பல அடிகளால் குறிஞ்சி என்னும் மலைநிலம்பற்றிய வருணனை உள்ளது. இந்தப் பாட்டைப் பாடியவர் புகழ்பெற்ற புலவர் கபிலர். வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவதற்காக அவர் இந்த பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியில் பழங்காலக் குறிப்பு ஒன்று உள்ளது.

பட்டினப் பாலை

பட்டினப் பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பாட்டு (காதல் துறைபற்றி அமைந்த கற்பனைப் பாட்டு). இந்தப் பாட்டில் காதலர் பிரிவாகிய பாலைத்திணை என்னும் பொருள் அமைந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினம் என்னும் கடற்கரைப் பட்டினத்தின் புகழும் பாடப்படுகிறது; அந்தப் பட்டினத்தில் ஆட்சிபுரிந்த சோழன் கரிகாலனின் பெருமையும் பேசப்படுகிறது. அந்தச் சோழனுடைய வேலும் செங்கோலும் உவமையாக அமைந்து, அந்த வாய்ப்பால் புகழ்ந்து பேசப்படுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையும் அவ்வாறே வேறு வாய்ப்பின் காரணமாகப் புகழப்படுகிறது. ஆகவே, பாட்டின் உயிர்ப்பொருள் காதல்பற்றிய கற்பனை; ஆனால் பாட்டில் பெரும்பங்கான வருணனைகள் பட்டினம்பற்றியும் அரசனைப்பற்றியும் வருவித்து அமைக்கப்பட்டவைகளே,