கற்றவர், இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தி மகிழ்ந்தவர், அரசியலில் தேர்ந்த
அறிவு பெற்றவர், நீண்ட நாள் அமைதியாக வாழ்ந்தவர், பல சமயத்தாரோடும் பழகினாலும்
பொதுமை நாட்டமே உடையவர், அறத்தில் அசையாத நம்பிக்கை உடையவர், சமய வேடங்களையும்
மூட நம்பிக்கைகளையும் புறக்கணித்தவர் முதலான குறிப்புகள் அவருடைய நூலால் தெரிகின்றன.
பாகுபாடு
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களுள் முதல் மூன்றையும்பற்றி 1330
குறட்பாக்களால் விளக்குவது திருக்குறள். நெறியோடு இந்த உலகத்தில் வாழ்ந்தால் தானாகவே
அமைவது முக்தி என்பதும், சிந்தைக்கு எட்டாத அந்த முக்தியைப்பற்றிச் சொற்களால்
விளக்கிக்கொண்டிருப்பது வீண் என்பதும் திருவள்ளுவரின் கருத்தாக இருக்கக்கூடும். அதனால்
அவர் வீடுபற்றி விளக்கவில்லை. ஆனால், மெய்யுணர்தல் என்ற அதிகாரம் அதற்கு உரிய
வழியைக் கூறுவதாகும்.
பத்துப் பத்துக் குறளாகப் பகுத்து, ஒவ்வொரு பத்திலும் ஒவ்வொரு பண்பையோ கொள்கையையோ
விளக்குகிறார். அறத்தை 380 குறளில் 38 அதிகாரங்களில் விளக்கியுள்ளார். அரசியல்பற்றியும்
அமைச்சர் முதலானவர்கள்பற்றியும் குடிமக்களின் பண்புகள்பற்றியும் இரண்டாம் பகுதியில்
700 குறளில் 70 அதிகாரங்களில் விளக்கியுள்ளார். மூன்றாம் பகுதியில் உயர்ந்த காதலரின்
காதல்பற்றிய கற்பனை 250 குறளில் 25 அதிகாரங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. முதல்
பகுதியைக் கற்பவர் அங்கே புத்தர் போன்ற ஒரு சான்றோரின் மொழிகளைக் கேட்கலாம்.
இரண்டாம் பகுதியில் தேர்ந்த அரசியல் அறிஞரின் உரைகளைக் கற்கலாம். மூன்றாம்
பகுதியில் திருவள்ளுவர் கற்பனைச் செல்வம் மிகுந்த ஒரு கவிஞராக விளக்கிக் காதலனையும்
காதலியையும் பேசச் செய்கிறார்.
பொதுமை
பல நூற்றாண்டுகளுக்கு முன் விளங்கிய ஒருவர், எல்லாச் சமயத்தாரும் போற்றக்கூடிய வகையில்
எல்லார்க்கும் பொதுவான ஒரு நூல் எழுதியிருப்பது பெரிய வியப்பாகும். அதனால் அவர்க்குப்
பின்வந்த எல்லா நூல்களும் அவருடைய கருத்துகளையும் சொற்களையும் எடுத்தாளுகின்றன. வெவ்வேறு
சமயத்தைச் சார்ந்தவர்கள் போரிட்டுக்கொண்டிருந்த காலங்களிலும் அவர்கள் எல்லாரும்
திருக்குறளைப் போற்றிக்கொண்டிருந்தார்கள்; அதுமட்டும் அல்லாமல், தம் தம் சமயத்தைச்
சார்ந்தவரே திருவள்ளுவர் என்ற சான்றுகள் காட்டிக்கொண்டிருந்தார்கள்!
|