பக்கம் எண்: - 67 -

எவ்வகைச் சார்பையும் கடந்து கடந்து, மனித உள்ளத்தின் இயல்பை துருவித் துருவி ஆராய்ந்து, உண்மையைமட்டும் தெளிவாக எடுத்துரைத்திருப்பது நூலின் மற்றொரு சிறப்பாகும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அடிப்படையான உண்மையைக் கண்டு உணரவும் உணர்த்தவும் அந்த ஆசிரியர்க்கு முடிந்தது. சாதி வேறுபாடு தலையெடுத்த அக்காலத்தில் அவர் அஞ்சாமல், “எல்லாரும் பிறப்பால் ஒத்தவர்களே” என்னும் கருத்தை வலியுறுத்தினார். “தவம் என்பது என்ன? வந்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதலும், மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருத்தலுமே ஆகும்” என்றார். “மனத்தில் மாசு இல்லாமல் தூய்மை பெறுதலே அறம். மற்றவை ஆரவாரமான பகுதிகளே” எனத் தெளிவாக்கினார்.

அறிஞர்கள் பலர் உரை எழுதுமாறு அவர்களின் அறிவைக் கவர்ந்த தமிழ்நூல் திருக்குறளே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பத்து உரையாசிரியர்கள் இதற்கு உரை எழுதியிருக்கிறார்கள். இந்தக் காலத்திலும் பலர் புதுப்புது உரைநூல்களும் விளக்க நூல்களும் எழுதி வருகிறார்கள். இந்தியாவில் பல மொழிகளிலும், வெளிநாடுகளில் பல மொழிகளிலும் இதற்கு மொழிபெயர்ப்புகள் உள்ளன. காந்தியடிகள் முதலான இக்காலத்துச் சான்றோர்கள் இந்த நூலின் உயர்வைப் புகழ்ந்துள்ளனர். ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்னும் ஜெர்மன் தத்துவஞானி - பலதுறைப் பேரறிஞர் - வாழ்வுக்கு உரிய அன்புநெறியைக் கூறும் உயர்ந்த நூல் என்றும், உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு இதுபோல் உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை என்றும் கூறிப் போற்றியுள்ளார்.

அறத்தில் உறுதி

திருவள்ளுவர் அறநெறியில் அழுத்தமான நம்பிக்கை உடையவர். “மறந்தும் பிறர்க்கும் கெடுதியானவற்றை எண்ணக் கூடாது. அவ்வாறு எண்ணினால் எண்ணியவனுக்கே கெடுதி விளையும்; அவ்வாறு கெடுதி விளையுமாறு அறமே செய்துவிடும்” என்கிறார்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழந்தவன் கேடு.

முடிவு நல்லதாக ஏற்படுமானால் அதுவே போதும் என்றும், அந்த முடிவை அடைவதற்கு உரிய வழி தவறாக இருந்தாலும் கவலை இல்லை என்றும் கருதுவோர் உண்டு. வழியைப்பற்றிப் பொருட்படுத்தாமல், முடிவைப்பற்றியே வற்புறுத்திக் கூறும் நூல்களும் உண்டு. ஆனால் திருவள்ளுவர்க்கு அது உடன்பாடு அல்ல. கருதிய முடிவை அடைய முடிந்தாலும் முடியவிட்டாலும்,