அதற்கு உரிய வழி தூய்மையாகவே - நல்லதாகவே - இருக்கவேண்டும் என்று திருவள்ளுவர்
பல இடங்களிலும் வலியுறுத்துகிறார் : “பெற்ற தாயின் பசியையே காண நேர்ந்தாலும்
சரி, அதைப் போக்குவதற்காகவும் சான்றோர் பழிக்கும் தீய செயல்களைச் செய்யக்கூடாது.”
“பிறர்க்கு உதவியாக ஈதல் நல்லது. அதனால் மேலுலக இன்பம் கிட்டும் என்கிறார்கள்.
அந்த மேலுலகம் இல்லை என்று மறுக்கப்பட்டாலும், ஈதலே நல்ல அறச்செயல் ஆகும்.”
உயர்ந்த குறிக்கோள் கொண்டு மனிதன் வாழவேண்டும் என்பது அவர் கருத்து.
அறநெறியைப் போற்றி வாழ்வதால், இந்த உலக வாழ்வுக்கு இடையூறு ஆகும் என்றாலும், அந்த
இடையூற்றை ஏற்றுக்கொள்வதே நல்லது என்பவர் அவர். அதனால், உயிர் போவதானாலும்
போகட்டும் என்று வலியுறுத்துவதே அவர் போக்கு. “பிறர் இல்லாதபோது பழித்துப்
பேசிப் பொய்ந்நெறியில் வாழ்க்கை நடத்துவதைவிட, வாழாமல் செத்துப்போவதே நல்லது;
அறத்தின் பயனாகிய நன்மை அதனால் கிடைக்கும்” என்று அவர் வற்புறுத்துவது காணலாம்.
பிறர்க்கு உதவியாக வாழும் ஒப்புரவு நெறியால் கேடு வரும் என்றால், தன் வாழ்வை விற்றாவது
அந்தக் கேட்டைப் பெறுவது தக்கது.” “நடுநிலைமை தவறிப்பெறக்கூடிய செல்வம்
நன்மையே தருவதாக இருந்தாலும், அதை அப்போதே நீக்கிவிடவேண்டும்.” “ஒருவன்
தன்னைத்தான் விரும்புகின்றவனாக இருந்தால், தீய செயல்களை எந்த அளவிற்கும் செய்தல்
கூடாது.” “பொருள் இல்லையே என்ற வறுமையின் காரணமாகவும் தீமை செய்தல்
கூடாது; செய்தால் மறுபடியும் வறுமையையே அடையநேரும்.” “தீமையை மனத்தால்
எண்ணுவதும் பாவமே. ஆகையால் மற்றவனுடைய பொருளைக் கவர்ந்து கொள்வோம் என்று மனத்தாலும்
எண்ணுதல் கூடாது.” “பிறர் சினம்கொண்டு துன்பம் செய்தபோதிலும், அதற்காகத்
திருப்பித் துன்பம் செய்யாமல் இருப்பதே உயர்ந்தவர்களின் கொள்கை.” “ஒருவன்
தன் உயிரை இழக்க நேர்ந்தாலும் மற்றொன்றின் உயிரைப் போக்கும் செயலைச் செய்தல்
கூடாது.”
இவ்வாறு
உயிர்வாழ்வைப் பொருட்படுத்தாமல் உயர்நெறியை வற்புறுத்தும் திருவள்ளுவர், நெறியோடு
வாழ்வதற்கு உரிய படிகளையும் ஆங்காங்கே தெளிவாக்குகிறார். பிறர் செய்யும் தீமைகளைப்
பொறுத்துக்கொள்வது எப்படி என்று கேட்பவர்க்கு, “அவர் செய்யும் பல தீமைகளையும்
விட்டு, முன்பு செய்த நன்மை ஒன்று இருக்குமானால், அந்த நன்மையையே திரும்பத் திரும்ப
எண்ணிப் பார்த்தால், கொலைபோன்ற தீமையும் மறக்கப்படும்” என்கிறார்.
பிறர்மேல் சினம் கொண்டு அவர்களுக்குத் துன்பம் செய்ய முனைவதை எப்படித் தடுப்பது?
மெலியவர்கள்மேல் தான் பெரும்பாலும் சினம் எழுகிறது; அவர்களுக்குத்
|