துன்பம் செய்யவே துணிவு ஏற்படுகிறது.
ஆகையால், தன்னைவிட வலியவர்கள் தன்னை வறுத்த முற்படும்போது, தன் நிலைமை எப்படிப்பட்டது
என்பதை, மெலியவர்மேல் தன் கொடுமை செல்லும்போது உணர்ந்து தடுத்துக்கொள்ளவேண்டும்
என்கிறார்.
உலகியல் தெளிவு
இவ்வாறு நெஞ்சத்தைப் பயன்படுத்தும் அறநெறியை
வற்புறுத்தும் திருவள்ளுவர், உலக வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு உரிய நெறிகளையும்
இரண்டாம் பகுதியில் தெளிவாக எடுத்துரைக்கிறார். கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை
என்று நான்கு அதிகாரங்களில் நாற்பது குறளில், அறிவுவளர்ச்சியின் சிறப்பை ஓதுகிறார்.
கல்வியைப்பற்றிச் சொல்லும் தொடக்கத்திலேயே, “கற்க வேண்டும்; கற்கத்
தகுந்தவற்றை ஐயமறக் கற்றுத் தெளியவேண்டும்; பிறகு கற்றதற்குத் தக்கவாறு நெறியில்
நின்று வாழவேண்டும்” என்கிறார். நல்லவர்களின் வறுமையை விடக் கல்லாதவர்களின்
செல்வம் பொல்லாதது என்கிறார். எது அறிவு? மனம் சென்ற இடத்தில் எல்லாம் செல்லவிடாமல்,
தீமையிலிருந்து நீக்கி நன்மையில் செலுத்தவல்லது அறிவு என்கிறார்.
அரசியல்பற்றி அவர் உரைக்கும் கருத்துகள் இன்றும்
பொன்போல் போற்றத்தக்கனவாக உள்ளன. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக்காலம்.
அந்தக் காலத்தில் அவர் அரசர்க்குச் சொன்னவைகளாக அமைந்த அறிவுரைகள், இன்று குடியாட்சி
முறையில் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும் மொழிகளாக உள்ளன. “குடிமக்களைத்
தழுவியவாறு ஆட்சி புரியும் அரசனுடைய பாதங்களைப் பொருந்தி நிற்கும் உலகம்.”
“தண்டித்து அடக்குவதாகிய வேல் அரசனுக்கு வெற்றி தருவதில்லை; அவனுடைய செங்கோல்
கோணாமல் இருக்குமானால் அதுவே வெற்றி தருவதாகும்,” “ஆட்சிபுரியும் கோலோடு
நிற்கும் அரசன் குடிமக்களிடம் வலிந்து பொருள் கேட்பது, வழியில் கொள்ளையடிப்பவன்
வேலோடு நின்று கொடு என்று கேட்பதைப் போன்றது.” “நீதிமுறை செய்யாத
அரசனுடைய ஆட்சியின்கீழ் வாழ நேர்ந்தால் வறுமையைவிடச் செல்வம் துன்பமானது ஆகும்,”
“குடிமக்கள் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் அழுது சொரியும் கண்ணீரே அரச செல்வத்தை
தேய்க்கும் படையாகும்.” இவ்வாறு இன்றைய குடியாட்சிக்கும் பொருந்திவரும் வகையில்
அவர் பல கருத்துகளைக் கூறமுடிந்த காரணம், அரசன் இன்னான் நாடு இன்னது என்பவற்றை எல்லாம்
கடந்து ஆட்சியின் பொதுத் தன்மைகளைமட்டும் தெளிந்து கூறிய சிறப்பியல்பே ஆகும்.
இத்தகைய பல கருத்துகள் திருக்குறளில் நிறைந்திருப்பதால், அந்த நூல் “காலம்
கடந்த பொதுமை நூல்” என்று புகழப்படுகிறது. அரசியலில் மட்டும் அல்லாமல், மற்றத்
துறைகளிலும் இன்றைய உலகம் எவ்வளவோ மாறியமைத்துள்ளது.
|