பக்கம் எண்: - 70 -

 அறிவியலால் இந்த நூற்றாண்டில் மாறுதல் மிகப் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளது. ஆயினும் திருவள்ளுவரின் கருத்துகளில் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பங்கு இன்றைய உலகிற்கும் ஏற்றனவாக உள்ளன.

“வள்ளுவனை உலகிற்குத் தந்து புகழ் பெற்றுக்கொண்டது தமிழ்நாடு” என்று பாரதியார் (இந்த நூற்றாண்டில்) பாடிப் புகழ்ந்தார். திருக்குறள் அவ்வாறு பொதுவாக விளங்குவதற்குக் காரணம் என்ன? திருவள்ளுவர் அந்த நூலை இயற்றியபோது, தமிழரையும் தமிழ்நாட்டையும் மட்டும் மனத்தில் கொள்ளாமல், உலகில் உள்ள பலவகை மனிதரையும் கருத்தில் கொண்டு, மனித இனத்தின் பொதுமையை உணர்ந்து எழுதியதே காரணம் ஆகும். 1330 பாக்களில் தம் சமயச் சார்போ இனச் சார்போ இல்லாமல் பொதுநோக்குடன் எழுதியதுபோலவே, தாம் பிறந்த நாட்டையும் குறிக்காமல், பேசிய மொழி முதலியவற்றையும் குறிப்பிடாமல் அவற்றைக் கடந்து மனித இனத்திற்காக உண்மைகளை உணர்ந்து எழுதியுள்ளார். நாடு, மொழி, மதம் முதலான வேறுபாடுகளைக் கடந்து உண்மைகளை மட்டும் நாடும் உள்ளம் படைத்த காந்தியடிகளைப் போல் பல நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்து நூல் எழுதியவர் அவர்.

குறிப்பிட்ட சமயம் சடங்கு முதலியவற்றை வற்புறுத்தாதது போலவே, தாம் போற்றிய கொள்கைகளையும் பிடிவாதமாக வற்புறுத்தித் திணிக்கவில்லை. அடிப்படை உண்மைகளைமட்டும் எடுத்துரைத்து, மற்றவற்றைச் சிந்தனை செய்து உணரும் வகையில் தூண்டுகிறார். எந்தக் கருத்தையும் கண்மூடி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவர் கொள்கை. “எந்தப் பொருளை எவர் எவரிடம் கேட்டு அறிந்தாலும், அதை ஆராய்ந்து உண்மை உணர வேண்டும்; அதுவே அறிவின் பயன்” என்று கூறுகிறார். கண் மூடி வாழும் வாழ்க்கையை வெறுத்து, பகுத்தறிவுக்குச் சிறப்புத் தருபவர் அவர். துறவின் பெருமையை எடுத்துரைக்கும் இடத்தில், துவராடை (காஷாயம்), சடைமுடி, கமண்டலம் முதலான புறக்கோலங்களைக் கூறவில்லை; உள்ளத்தில் பற்றற்று வாழும் தூய்மையையே கூறுகிறார். போலித் துறவிகளின் வேடங்களையும் நீராடல் முதலியவற்றையும் கடுமையாகத் தாக்குமிடத்திலும் அந்த முற்போக்கையும் தெளிவையும் காணலாம். பலவகைச் சடங்குகள் தம் சுற்றுப்புறத்தில் கண்ட அவர், அவற்றுள் எதையும் கூறவில்லை. அவை எல்லாம் காலந்தோறும் இடந்தோறும் மாறக் கூடியவை என்பதை உணர்ந்து, என்றும் எங்கும் மாறாமல் வாழ்வுக்குத் தேவையான நல்ல பண்புகளையும் செயல்களையும் மட்டுமே உணர்த்தியுள்ளார்.