பக்கம் எண்: - 87 -

பாடல்கள் மக்களால் என்ன என்ன வடிவில் பாடப்பட்டனவோ அவற்றைக் கேட்டு உணர்ந்து, அந்தந்த வடிவங்களில் செய்யுள் இயற்றி அந்தந்த நாட்டு மக்களின் வாயால் பாடப்படுவதாகக் காப்பியத்தில் அமைத்துள்ளார். அதனால் பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை இன்று நாம் உணர்வதற்குச் சிலப்பதிகாரம் ஒன்றே உதவுகிறது.

காப்பியம் பிறந்த கதை

சேரன் செங்குட்டுவன் தன் நாட்டின் மலைவளம் காண்பதற்காகத் தன் தேவியுடன் பேரியாறு என்னும் ஆற்றங்கரையில் செங்குன்று என்னும் மலைப்பகுதிக்குச் சென்றான். அப்போது சேரனுடைய தம்பி இளங்கோவும் அவருடைய நண்பரான புலவர் சாத்தனாரும் உடன் சென்றார்கள். எல்லோரும் இயற்கையின் அழகான காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். மலையில் வாழும் மக்களின் ஆடல் பாடல்களையும் கண்டும் கேட்டும் களித்தார்கள். மக்கள் பல வகையான மலைப்பொருள்களைக் கொண்டுவந்து அரசனுக்கும், தேவிக்கும் கொடுத்து வணங்கினார்கள். அப்போது ஒரு செய்தியும் தெரிவித்தார்கள் : “அந்த வேங்கை மரத்தின் அடியில் சில வாரங்களுக்குமுன் துயரமே வடிவாக ஒருத்தி ஒரு முலை இழந்தவளாய் வந்துநின்றாள். அவள் யார் என்று தெரியவில்லை. நாங்கள் அணுகிக் கேட்டபோது, கணவனை இழந்த பாவி நான் என்றுமட்டும் சொன்னாள். பதினான்கு நாள் உணவும் உறக்கமும் இல்லாமல் அங்கே இருந்தாள். பிறகு தேவருலகம் அடைந்தாள்” என்றார்கள். கேட்ட அரசனும் அரசியும் அமைச்சர் முதலானவர்களும் வியப்படைந்தார்கள். அப்போது புலவர் சாத்தனார் அரசனைப் பார்த்து, “அந்த நங்கைக்கு நேர்ந்தது எனக்குத் தெரியும். அவள் மதுரையில் தன் கணவனை இழந்தாள். அரண்மனைப் பொற்சிலம்பைத் திருடினான் என்று குற்றம் சாட்டி அவன் கொல்லப்பட்டான். செய்தி அறிந்த அவனுடைய மனைவி - கண்ணகி என்பவள் - உடனே பாண்டிய அரசனிடம் சென்று தன் கணவன் குற்றவாளி அல்ல என்று காட்டி அந்தக் கொடுமையை எடுத்துரைத்தாள். பாண்டியன் தன் தவறு உணாந்து, உடனே மயங்கி மாண்டான். அவனுடைய தேவியும் உடன் இறந்தாள். கண்ணகி, ‘நான் பத்தினி என்பது உண்மையானால் இந்த அரசையும் மதுரை நகரத்தையும் அழிப்பேன்’ என்று வஞ்சினம் கூறினாள். தன் ஒரு முலையைத் திருகி எறிந்தாள். நகரம் பற்றி எரிந்தது. கண்ணகியின் சினம் தணிந்தது. அவன் தன் நாடாகிய சோழ நாட்டுக்குத் திரும்பிச் செல்லாமல், உன் ஆட்சியில் உள்ள இந்த சேரநாட்டு மலைக்கு வந்தாள். பாண்டியனுடைய கொடுமையை உனக்கு அறிவிப்பதுபோல இங்கே வந்தாள்” என்று நடந்தைச்