|
பிறகு புதிய
காதல்வெறியில் எழும் பாராட்டு மொழிகள் முதலில் கேட்பவை; எல்லாம் அவளுடைய உடலின்
இளமையும் அழகும் பற்றியவை. இரண்டாவதாகக் கேட்கும் பாராட்டு மொழிகள் அவனுடைய வாழ்வின்
கடைசி நாளில் கொலை செய்யப்படுவதற்குமுன் அவன் கூறியவை; அவை எல்லாம் கண்ணகியின்
உயர்ந்த பண்புகளை நினைந்து உருகிக் கூறியவை.
மாதவி
கோவலனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினாள். முதலில், கோவலன் தனக்கு உரியவனாகத் தன்னோடு
மகிழ்ந்திருந்து பிரிந்த அன்று எழுதியது; இன்னும் அவன் தனக்கு உரியவனே என்ற நம்பிக்கையால்,
விரைவில் திரும்பி வருமாறு காதல் குறிப்போடு தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பில்
தோய்த்த பித்திகை அரும்பால் எழுதிய மலர்ச்செண்டுக் கடிதம். அடுத்தது, இனி அவன்
தன்னிடம் திரும்பி வரமாட்டான் என்ற நம்பிக்கை இழந்து வணக்கத்தோடு எழுதியது. முன்னதில்
உள்ளவை இன்பமான காதல் மொழிகள்; பின்னதில் உள்ளவை பணிவான தூய சொற்கள்.
அரண்மனை
முதலான இடங்களில் விளங்கும் நுண்கலைகள் மட்டும் அல்லாமல், காட்டிலும் மேட்டிலும்
உள்ள மக்கள் கலைகளும் (நாட்டுக் கலைகள்) இளங்கோவடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தன.
அந்த மக்களின் கலைகளில் உயிர்த் துடிப்பு விளங்குவதை இளங்கோவடிகள் உணர்ந்து போற்றினார்.
அவற்றிற்குத் தம் நூலில் தக்க இடம் தந்திருப்பதும் அவருடைய உண்மையான கலையுள்ளத்தைக்
காட்டுகிறது. முப்பது படலங்கள் உடைய சிலப்பதிகாரத்தில், நான்கு படலங்கள் இப்படிப்பட்ட
மக்களின் ஆடல்பாடல்களைப்பற்றியே அமைந்துள்ளன. அவை கானல் வரி, வேட்டுவவரி. ஆய்ச்சியர்
குரவை, குன்றக்குரவை என்னும் பகுதிகள். அவற்றுள், கானல் வரியில் கடற்கரைச் சோலையில்
உள்ள மீனவர்களின் பாடல்களும் காவிரியாறுபற்றிய பாடல்களும் அமைந்துள்ளன. இளங்கோவடிகள்
அந்த மக்கள் பாடல்களுக்குப் புலமை மெருகு ஏற்றி இலக்கியமாக்கிக் கூறியிருந்தாலும்,
அவற்றின் உயிர்த் தன்மையை மாற்றாமல் தந்திருக்கிறார். அவ்வாறே, வேட்டுவ வரியில்
காளியை வழிபடும் வேடவர்களின் பாடல்களை அமைத்துள்ளார். ஆய்ச்சியர் குரவையில்
கண்ணனை வழிபடும் இடையர் மகளிரின் ஆடலும் பாடலும் உள்ளன. குன்றக் குரவையில் மலைப்
பகுதியில் வாழும் மக்களின் ஆடல்பாடல்கள் உள்ளன. இவை நான்கும் தவிர, இருபத்தொன்பதாவது
காதையில் (படலத்தில்) பலவகை நாட்டுப்பாடல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளார். பெண்கள்
கூடியிருந்து விளையாடும் அம்மானைப் பாடல், பந்தடித்துப் பாடும் கந்துக வரி, ஊசலாடிப்
பாடும் ஊசல் வரி, நெல் குற்றும்போது பாடும்
|