பக்கம் எண்: - 92 -

வள்ளைப்பாட்டு என்பவற்றை அங்கே அமைத்துள்ளார். இவை, நேரே மக்களின் ஆடல் பாடல்களை வடித்து மெருகேற்றித் தந்த இடங்கள். இவை தவிர, மக்களின் பாடல்களை (நாட்டுப் பாடல்களை) நமக்குத் தராமல் அவற்றைப்பற்றிச் சுட்டிக் கூறும் இடங்களும் சிலப்பதிகாரத்தில் உள்ளன. உழவர்களின் தொழிலோடு இயைந்த பாடல்களாகிய விதைவிதைக்கும் பாட்டு. களைகட்டல் பாட்டு, அறுவடைப் பாட்டு ஆகியவற்றைப்பற்றி இளங்கோ குறிப்பிட்டிருக்கிறார். சேர மன்னன் வடநாட்டு வெற்றிக்குப்பின் திரும்பி வரும்போது சேரநாட்டு மக்கள் அவன் வருகையைக் கொண்டாடுவதாகக் கூறும்போது, நான்கு வகை நிலங்களில் வாழும் தொழிலாளிகளின் பாட்டுகளையும்பற்றி நான்கு வகைக் குறிப்புகள் தந்துள்ளார். மலையில் வாழும் குறத்தியர் தினைப்புனத்தைக் காவல் செய்துகொண்டே யாழ் இசைத்துப் பாடினார்களாம். அந்தப் பாட்டில் வடநாட்டில் சேரன் செய்த போரில் வீரச்செயல் புரிந்த யானைகளைப் புகழ்ந்தார்களாம். காட்டுநிலத்தில் உழவர்கள் பாடிய பாட்டில், தம் எருதுகளைப் பார்த்து, “பகையரசர்களின் கோட்டைகளை நம் அரசன் அழித்தான். அந்த வெற்றி வேந்தனின் பிறந்த நாள் நாளை வருகிறது. எருதுகளே! நாளை உங்களுக்கு விடுமுறை; நுகத்தடி உங்கள் கழுத்தில் இல்லாமல் நாளை நீங்கள் மகிழலாம்” என்று பாடினார்களாம். ஆன்பொருநை என்ற ஆற்றங்கரையில் பசுக்களை மேய்த்த ஆயர்கள் குழல் இசைத்துப் பாடிய பாட்டில், “பசுக்களே! இமய மலையிலிருந்து வெற்றியோடு திரும்புகிறான் நம் அரசன். அவன் அங்கிருந்து பல புதிய மாடுகளைக் கொண்டுவருகிறான். அவற்றின் உறவு உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. நாளை மேயப்போகும்போது  நீங்கள் அவற்றின் துணையோடு போகலாம்” என்று பாடினார்களாம். கடற்கரையில் மீனவப் பெண்கள் பாடிய பாட்டில், “தோழியரே! நம் அரசனுடைய படையெடுப்புக்கு அறிகுறியான வஞ்சிப்பூவைப் பாடுவோம்; அவனுக்கு வெற்றி தந்த போர்க்கு அறிகுறியான தும்பைப் பூவையும் பாடுவோம். அவனுடைய சேரர்குலத்துக்கு உரிய பனம்பூவையும் பாடுவோம்; வாருங்கள்” என்றார்களாம்.

இவை எல்லாம் இளங்கோவின் கலை உள்ளம் மக்களின் ஆடல் பாடல்களைப் போற்றி மதித்த மதிப்பை விளக்குவன ஆகும்.

இவ்வாறு அக்காலத்து வழங்கிய நாட்டுப்பாடல்களைத் தழுவி அவர் சிலப்பதிகாரத்தில் தந்துள்ள பாடல்கள் சுவை நிரம்பினவாக உள்ளன. எடுத்துக்காட்டாக, மதுரையில் குரவைக்கூத்துள் ஆய்ச்சியரின் ஒரு பாடலைக் காண்போம்:     

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ