வஞ்சிமாநகரில் மகளிர் பந்து அடித்து ஆடும்போது பாடுவதாக உள்ள பாடல், பந்தடிக்கும்போது
பெண்கள் அசையும் அசைவைப் புலப்படுத்தும் ஓசை நயம் உடையது.
|
பொன்னிலங்கு
பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட |
|
மின்னிலங்கு
மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் |
|
தென்னன்
வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே |
|
தேவர்ஆர மார்பன் வாழ்க என்றுபந் தடித்துமே. |
ஊசல்வரி,
வள்ளைப்பாட்டு என்பவை பெண்கள் ஊசலாடும் போதும் நெல் குற்றும்போதும் அரசனை வாழ்த்தியவாறே
பாடிய பாடல்கள். அவற்றிலும் அந்தந்த அசைவுகளுக்கு ஏற்றவாறு பாடல்களின் ஓசை அமைந்திருக்கிறது.
கண்ணகி தன் கணவன் கொலைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன், பதைபதைத்துப்
பலவாறு புலம்பி அழுகிறாள்; ‘துன்பமாலை’ என்னும் காதையில் அவளுடைய துயரம்
பல அடிகளில் அவளுடைய வாய்ச்சொல்லாகவே தரப்பட்டுள்ளது. அந்தப் பாடல்கள் சோக
உணர்ச்சியைப் புலப்படுத்துவனவாக உள்ளன. அடுத்த காதையாகிய ‘ஊர்சூழ் வரி’
என்பதில் கொலைப்பட்ட கணவனுடைய உடம்பைக் கண்டு அவள் கதறுவதும் அழுது புலம்புவதும்பற்றிய
பாடல்களும் அந்த உணர்ச்சிக்கு ஏற்ற வடிவம் தரும் ஓசையுடன் அமைந்துள்ளன.
புதுமைகள்
இளங்கோவடிகளுக்கு முற்பட்ட புலவாக்ள் கையாளாத புதிய செய்யுள்
வகைகளை அவர் கையாண்டு, பலவேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் கருவிகளாக்கியுள்ளார்.
அகவலும் வெண்பாவுமே மிகுந்திருந்தன பழைய இலக்கத்தில். கலிப்பாவும் பரிபாட்டும்
சிறுபான்மை ஓசைநயம் உள்ளனவாக இருந்தன. பிற்காலத்தில் தாழிசை துறை விருத்தம் என்ற
பெயர்கள் உடைய செய்யுள் இனங்கள் வளர்ந்தன. இடைக்காலத்தில் வளர்ந்த அந்தச்
செய்யுள் இனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பவைபோல் சிலப்பதிகாரத்தில் புதிய பலவகைச்
செய்யுள் வடிவங்களைக் காண்கிறோம். கடற்கரையில் பாடும் இசைப் பாடல்களைக் கொண்ட
கானல் வரியிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவற்றிலும் இளங்கோ அந்ததப் பகுதியில்
வழங்கிய நாட்டுப் பாடல்களாக அவற்றை அமைத்துள்ளார். அக்காலத்து நாட்டுப் பாடலிலிருந்தே
அவர் புதிய செய்யுள் வடிவங்களை வடித்துத் தந்தார் என்பதில் ஐயம் இல்லை. இவ்வகையில்
தமிழிலக்கியத்திற்கு அவர் செய்துள்ள தொண்டு ஒப்பற்றதாகும்.
|