முகப்பு
பக்கம் எண்: - 95 -
தொடக்கம்

உலகப் பழைய காப்பியங்கள் அரச குடும்பத்தாரையே தலைவர்களாகக் கொண்டவை. இளங்கோ தம் காப்பியத்தின் தலைமக்களாக ஓர் அரசனையும் அரசியையும் அமைக்காமல், வணிகர் குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்தது ஒரு புதுமையே. வணிகக் குடும்பத்துப் பெண்ணே காப்பியத்தின் தலைவி; அவள் காலில் அணிந்த சிலம்பே காப்பியத்திற்குப் பெயர். முதல் தமிழ்க் காப்பியத்தை இவ்வாறு அமைத்த காரணத்தால், குடிமக்களுள் யாராயினும் ஒரு காப்பியத்திற்குத் தலைவனாக, தலைவியாக அமைய முடியும் என்ற துணிவு ஏற்பட்டது (ஒரு கணிகையின் மகளாகிய மணிமேகலையைத் தலைவியாகக் கொண்டு மணிமேகலை என்ற காப்பியம் அடுத்து இயற்றப்பட முடிந்தது). இளங்கோவடிகள் செய்த மற்றொரு புதுமை என்ன என்றால், சமுதாயத்திலும் பல நூல்களிலும் வழக்கமாகப் பழித்துக் கூறப்படும் கணிகையாகிய மாதவி அவருடைய நூலில் கண்ணகிக்கு அடுத்த நல்ல இடத்தைப் பெற்று விளங்குவதாகும். கோவலன் அவளை ஓர் இடத்தில்  பழித்தபோதிலும், அடுத்த நிலையிலேயே “தன் தீது இலள்” என்று அவளைக் குற்றமற்றவளாகக் கூறுகிறான். மாதவியும் அவனிடம் உண்மையான அன்பு கொண்டு வாழ்ந்திருந்த காரணத்தால்தான், அவனுக்கு நேர்ந்த இன்னலைக் கேள்விப்பட்டவுடன் துறவறம் பூணுகிறாள்; தன் ஒரு மகளையும் இளமையிலேயே துறவி ஆக்குகிறாள். தன் மகள் என்று சொல்லாமல், கண்ணகியின் மகள் என்று கூறுகிறாள். விலைமகளிர் குடும்பத்தில் பிறந்த ஒருத்தி  தன் குலத்தொழிலைப் பழித்து ஒதுக்கிய துணிவைப் பதினெட்டு நூற்றாண்டுக்குமுன் முதன்முதலில் இந்தத் காப்பியத்தில்தான் காண்கிறோம்.

பொதுவாகச் சைன சமயத் துறவிகள் இல்லறத்தைப் புகழ்ந்து பேசுவதும் இல்லை; பெண்களை உயர்த்திக் கூறுவதும் இல்லை. இளங்கோவடிகள் இவ்வகையிலும் புதுமை நிகழ்த்தியுள்ளார். இல்லறத்தைப் புகழ்ந்து, கண்ணகியின் கற்பு வாழ்வை உயர்த்திக் கூறியுள்ளார். தம் கதையில் வரும் ஒரு சைனப் பெண் துறவியாகிய கவுந்தியடிகள் வாயாலேயே புகழுமாறு அமைத்துள்ளார்.

காப்பியம் அல்லது நாடகம் சுவையாக அமையவேண்டுமானால், நல்ல தலைவர்க்கு நேர்மாறான பொல்லாதவரையும் படைத்து முரண்படக் காட்டவேண்டும்; நல்லவர் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருந்து கொடுமை செய்யும் பொல்லாதவரைப் படைத்துக் காட்டவேண்டும். சிலப்பதிக்காரத்தில் கண்ணகியும் கோவலனும் பட்ட துன்பங்களுக்குக் காரணமாகக் கொடியவன் (Villain) ஒருவனைக் காட்ட இளங்கோவுக்கு மனம் இல்லை. பொற்கொல்லன் ஒருவனை மதுரையில் காட்டி, அவனை